மலடி

பொன் குலேந்திரன்


அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தாள். அது காலை இரண்டு மணி காட்டியது. பக்கத்தில் தேவனும் அவளைப் போல் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்ததை அவளால் உணரமுடிந்தது. அன்று பின்னேரம் டாக்டரிடம் போய் வந்தபின் இருவரும் அதிகம் பேசவில்லை. இரவு உணவு கூட அவ்களுக்கு வெறுப்பாகயிருந்தது. ஆனால் அவர்கள் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வர போராட்டம் நடந்துகொண்டிருந்தது. மௌனமாக இரவு சாப்பாட்டை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு நேரத்தோடு வந்து படுத்தார்கள். வழமையில் தேவன் தான் பொறியிலில் உயர் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் யூனிவர்சிட்டியில் நடந்ததை கதை கதையாய் சொல்லுவான். அதே போல் அபிராமியும் தான் தற்காலிகமாக வேலை செய்யும் ஒக்ஸ்பேர்ட ஸ்டீரீட் கடையொன்றில அன்று சந்தித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வாள். ஆனால் அன்று மட்டும் இருவரும் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் அந்த மெடிக்கல் ரிப்போர்ட் தான் காரணம். என்ன முடிவை நாங்கள் டாக்டருக்கு சொல்வது.? அவர்கள் எதிர் பார்க்காதவாறு பரிசோதனைக்குப் பின் வந்த ரிப்போர்ட் அமைந்திருந்து. ஊர் நினைத்தது ஒன்று ஆனால் உண்மை வேறு.

*******

அபிராமிக்கு திருமணமாகும் போது வயது இருபத்தி இரண்டு. பல்கலைக் கழகத்தில் கணக்கியலில் சிறப்புச் சித்தி பெற்று, படிப்பு முடித்து அடுத்த சில மாதங்களில் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவள் திருமணத்துக்க இணங்க வேண்டி இருந்தது. அவள் மேலும் படிப்பைத் தொடர்ந்து எம்.எஸ்சி செய்ய போட்டிருந்த திட்டமெல்லாம் நினைவேறாமல் போய்விட்டது. காரணம் அவளின் அப்பாவுக்கு இன்னும் அதிக காலம் தான் உயிரோடை இருக்கமாட்டேன் என்ற பயம் தான் .பிடித்துக் கொண்டது. “தனக்கு மாரகத் திசை தொடங்கி விட்டதாம். தான் சாக முன் ஒரு பேரப் பிள்ளையையாவது பார்த்தாக வேண்டும” என்று அவர் காரணம் காட்டினார். அம்மாவுக்கு அபிராமி அவ்வளவு இளமையில் திருமணம் முடிப்பது விருப்பமில்லை. ஆனால் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடந்தது.

தேவன் அவளின் தகப்பனுக்கு தூரத்துச் சொந்தம். மின் பொறியலாளராக கொழும்பில் வேலைபார்த்தவன். அவனுக்கும் அபிராமிக்கும் வயது வித்தியாசம் அவ்வளவுக்கு இல்லை. ஆக மூன்று வயது தான் வித்தியாசம். அபிராமி பெற்றோருக்கு ஒரே மகள். ஓவசியராக இருந்து நிறையச் சம்பாதித்தவர் அபிராமியின் தந்தை தம்பிராசா. ஓவசியர் தம்பிராசா சேர்த்த சொத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடு, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஒரு பெரிய வீடு அவர் பேயரில் இருந்தது. அதில் கொழும்பு வீட்டை அபிராமிக்கு சீதனமாக கொடுத்ததார். தனக்குப் பிறகு தன் சொத்தெல்லாம் அபிராமிக்கு என்றும் அவளுக்கப் பிறகு அவள் பிள்ளைகளுக்கும் என்று அவர் எழுதி வைத்த உயில் எழுதி வைத்தார்;. ஆனால் அவர் எதிர்பாhத்த மாதிரி நடக்கவில்லை. அபிராமி கலியாணமாகி பத்து வருஷமாகியும் பிள்ளை பாக்கியம் அவளுக்கு கிடைக்கவில்லை. அந்தக் கவலை அவளை வாட்டியது. ஊரில் அதை வக்கனையாக பலர் பேசினார்கள். மலடி என்ற பட்டம் அவளை தேடிவந்து ஒட்டிக் கொண்டது. தகப்பன் ஊரை ஏமாற்றி சொத்து சேர்த்தார். அது பிள்ளையிளை காட்டிப் போட்டுது என்று மறைமுகமாக சிலர் கதைத்தனர். கலியாண வீடு, சாமித்திய சடங்கு, சுமங்கலி பூஜை போன்ற நல்ல காரியங்களுக்கெல்லாம் போகாமல் அவள் ஒதுங்கி நின்றாள்.

அவள் சாதகத்தின்படி அவளுக்கு உதயத்து செவ்வாய், அதானல் மணவாழக்கையில்; குறையிருக்கும் என்று சாஸ்திரி சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. திருமணத்துக்கு முன் செவ்வாய் கிரகத்துக்கு சாந்தி கூட அவள் பெற்றோர்கள் செய்தார்கள். “அப்ப ஏன் அப்பா தெரிந்திருந்தும் தான் சேர்த்த சொத்தை அனுபவிக்க ஒரு வாரிசு வேண்டும் என்ற தானே அவசரப்பட்டு கலியாணம் எனக்கு செய்து வைத்தார்”. அபிராமி தாயிடம் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வாள். தேவன் தன் மனைவிமேல் அளவுக்கதிகமாக அன்பு வைத்திருந்தான். அவள் மனது நோக எதுவும் பேசமாட்டான். அதனால் அவள் இரண்டாம் திருமணம் அவனை செய்யச் சொன்ன போது கோபத்தில் இரண்டு நாள் அவன் அவளோடு பேசிவில்லை. “அபிராமி நான் பத்து வருஷம் உன்னோடு கூடிவாழ்நது போட்டு எப்படி நான் இனி இன்னொருத்தியோடு வாழ முடியும்?. ஒரு குழந்தைக்காக நான் மறுதிருமணம் செய்யவேண்டு மென்றால் ஒரு சமயம் எனக்கு இரண்டாம் தாரமாக வருபவளுக்கும் பிரச்சனையிருந்து குழந்தை கிடைக்காமல் போய் விட்டால்?. தேவன் முற்றறக மறு திருமணம் செய்ய மறத்துவிட்டான். ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து வளர்க்க கூட அபிராமியின் பெற்றோர் அவ்வளவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

*******

மேல் படிப்புக்கான முன்று வருடப் புலமைப் பரிசு பெற்று தேவன் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு போன போது அவன், கூடவே அபிராமியையும் அழைத்துச் சென்றான். ஊர் வாயில் இருந்து தப்புவதற்கு அது நல்ல சந்தர்ப்பமாகப் அவனுக்குப் பட்டது. அதுவுமன்றி மனைவியைப் பிரிந்து அவனால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. தேச மாற்றமாவது ஒரு நல்லதை செய்யட்டும் என்ற ஒரு நம்பிக்கை அவர்கள் இருவருக்கும்.

லண்டன் வந்து சிலமாதங்களில், அவனோடு கொழும்பு றோயல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பன் சந்திரனை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்கு ஏற்பட்டது. கல்லூரி காலத்தில் சந்திரனும் தேவனும் இணைபிரியாத நண்பர்கள். சந்திரனும் தேவனும் ஒரே வருடம் பல்கலைககழகத்துக்குள் நுலைந்தவர்கள். சந்திரன் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றான். தேவன் சிவில் என்ஜினியரானாhன். படிக்கும் காலத்தில் பம்பலபிட்டி லோரிஸ் வீதியிள் உள்ள ஒரு அறையொன்றில் இருவரும் தங்கிப் படித்தனர். பல்கலைக்கழகப்படிப்புக்குப் பின் அவர்கள் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் சந்திரன் தன்னோடு படித்த ஒரு தமிழ் பெண் டாக்டரை காதலித்து மணமுடித்து லண்டன் சென்று விட்டதாக கேள்விப்பட்டான். சந்திரனும் அவன் பெற்றோருக்க ஒரே பிள்ளை.

சந்திரனைச் சந்தித்த போது தேவனுக்க ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சந்திரனின் மணவாழக்கை சில வருடங்களே நீடித்தது எனறும் அவனுக்கும் தன்னைப் போல் குழந்தைகள் இல்லை என்று அவன் சொன்னபோது தேவனால் நம்ப முடியவில்லை.. என்ன நடந்தது என்று கேட்டபோது லண்டன் வந்தபின் தானும் மனைவியும் ஒரு கார் விபத்துக்கு உள்ளானதாகவும் அதில் கற்பமாகயிருந்த தன் மனைவி இறந்ததாகவும் சொல்லி சந்திரன் அழுதான். அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்று தேவனுக்கு தெரியும் . சந்திரன் மனைவி வசந்தியை கொழும்பில் படிக்கும் பல தடவை சந்தித்திருக்கிறான். படித்தகாலத்தில், தினமும் பம்பலபிட்டி பிள்ளையார் கோயிலில் சந்திரனோடு அவளைக் காணலாம். நல்ல மனம் உள்ள சந்திரனுக்கு வாழ்க்கையில் இப்படியும் ஒரு துயரமா என்று தேவனும் அபிராமியும் கவலைப்பட்டார்கள்.

சந்திரன் லண்டனில் ஒரு கைனகோலஜிஸ்ட்டாக வேலை செய்தான். அவனது கைராசி என்னவோ அவனிடம் வந்த கேஸ்கள் எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லாமல் குழந்தை வேறு தாய் வேறாக சென்றாதாக கேள்விப்பட்டான். பிள்ளைகள் இல்லாதவர்களின் பிரச்சனைகளை கூட அவன் தீர்த்து வைத்தாக அவன் நண்பர்கள் கூறியதைக் கேட்டு மனதுக்குள் தன் பிரச்சனையையும் அவனோட பேசி ஒரு தீர்வு காணலாமா என அபிராமியுடன் கலந்து பேசினான் தேவன்;. இறுதியில் சந்திரனின் மருத்துவ உதவியை அவர்கள் நாடினார்கள்.

“உனக்கு இந்த உதவியை நான் செய்யாவிட்டால் எங்களுக்கு இடையே உள்ள நட்புக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனக்கு தான் குழந்தைச் செல்வம் இல்லாவிட்டாலும் உனக்காவது கிடைக்க வழியிருக்கா என்று பார்ப்போம்” என்றான் சந்திரன்.

மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் தேவனும் அபிராமியும் முடிவை எதிர்பார்த்து நின்றனர். வந்த மெடிக்கல் ரிப்போர்ட் சந்திரனை திகைக்க வைத்தது. அதை தேவனுக்கும் அபிராமிக்கும் எடுத்துச் சொல்ல அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது .

ரிப்போர்டின் படி அபிராமியின் கருப்பைபையில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் சந்திரனின் விந்துக்கள் குழந்தையை உருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன. சிறு வயதில் அவனுக்கு வந்த ஏதோ ஒரு கடுமையான வருத்தம் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்; என்று சந்திரன் விளக்கம் கொடுத்த போது, தேவன் மனைவியின் கையைப் படித்து ஓ வென்று அழுதுவிட்டான். அபிராமி கலங்கவில்லை.
சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு “எதற்காக இப்ப நீங்கள் அழுகுறீர்கள். எமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்” என்றாள் வார்த்தைகள் தழும்ப அபிராமி.

“ஊர் உனக்கு மலடி என்று பட்டம் சூட்டிற்று. உண்மையில் நான் தான் மலடன். எமது சமுதாயம் எந்தக் குறையிருந்தாலும் முதலில் அந்தப் பழியை பெண்மேல் தான் போடும். என்னை மன்னித்து விடு. திருமணத்துக்கு முன் இதைப்பற்றி தெரிந்திருந்தால் நான் திருமணத்துக்கு சம்மதித்திருக்க மாட்டேன். உன் வாழ்க்கையை பாழடித்திருக்க மாட்டேன்” என்று அபிராமியின் கையைப் பிடித்து அழுதான். அபிராமி பேசாமல் அமைதியாக “என்ன விசர் கதை கதைக்கிறியள். எது நடக்க வேண்டும் அது நல்லதாகவே நடக்கத்தான் செய்யும். மனம் வருந்தி பயன் இலலை இனி நடக்கப் போவதைப் பார்ப்போம். கீதையில் சொன்ன தத்துவும் பேசினாள் அபிராமி.
சற்று நேரம் சிந்தித்து விட்டு “டாக்டர் இதுக்கு தீர்வு இல்லையா?” என்றாள்; மனத் தைரியத்துடன அபிராமி;.

“ ஏன் இல்லை. இந்த நவீன விஞ்ஞான உலகில் இல்லாத தீர்வுகளா” என்றான் டாக்டர் சந்திரன் அமைதியாக.
அந்தப் பதிலை தேவனும் அபிராமியும் டாக்டர் சந்திரனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

“என்ன சந்திரன் சொல்லுகிறீர்கள?;. எங்களுக்குப் குழந்தை கிடைக்க வழியுண்டா?” தேவன் கேட்டான்.

“ஆம் உண்டு. ஆனால் படித்த நீங்கள் இருவரும் உங்கள் இருவருக்குள்ளும் கலந்தாலொசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இது உங்கள் இருவருக்கும் எனக்குமிடையேலான இரகசியமக இருக்கட்டும்” என்று கூறிவிட்டு செயற்கை முறையில் கருப்பையுக்குள் விந்துவை செலுத்தி குழந்தை பெறவைக்கும் முறையை விபரமாக விளக்கினார் சந்திரன்.
தேவனும் அபிராமியும் அதைக் கேட்டதும் வாயடைத்து போய் இருந்தார்கள்.

“என்ன பேசாமல் மொளனமாகயிருக்கிறீர்கள். பத்து வருஷமாக உங்களுக்கு குழந்தையில்லை. இப்போ ஒரு வழி இருக்கிறது. அதுவும் நீங்கள் லண்டனில் இருப்பதால் இதை என்னால் நீஙகள் சம்மதித்தால் திருப்திகரமாக நிறைவேற்றி வைக்க முடியும். இருவரும் கலந்து ஆலோசித்து பதில் சொல்லுங்கள் “ என்றாhர் சந்திரன்.

“யார் விந்தை என் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்துவீர்கள்” என்ற கேள்வியை எழுப்பினாள் அபிராமி.;
“ நிட்சயமக அது உங்கள் கணவனுடையதாக இருக்கமுடியாது. ஏன் என்றால் அது சக்தியிழந்த விந்துக்கள். அதற்கு ஒரு விந்து வங்கியில் இருந்து உங்கள் இனத்துக்கும் நிறத்துக்கு பொருத்தமான தொன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்கு சில விதிமுறைகளும் பரிசோதகைளும்; உண்டு. அந்த விந்துக்கு உரிமையாளர் யார் என்பது பரம இரகசியமாக வைக்கப்படும். உங்களுக்குத தெரியவராது. அதனால் பிறகாலத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வரக் கூடாது. அதுவும் நோய் இல்லாத ஒருவரிடம் பெற்ற விந்துவாக இருக்கும். ஏன் என்றால் பிறக்கும் குழந்தை அழகான ஆரோக்கியமான, உங்களைப் போல் நிறமுள்ள குழந்தையாக இருக்க வேண்டுமல்லாவா. அதுவும் அபிராமியின் வயிற்றில் வளர்ந்த குழந்தையாக இருக்கவேண்டும். சுவிகாரம் எடுப்பதிலும் பார்க்க இது ஒரு படி மேல். ஏன் என்றால் அபிராமியின் வயிற்றில் வளர்ந்த குழநதையல்லவா. அக்குழநதையின் இரத்தத்தில அபிராமியின் மரபுணுவும் கலந்திருக்கும். அதைதானே நீங்களும் விரும்புவீர்கள் என்ன?” என்றார் சிரித்தபடி சந்திரன்.

தேவன் அபிராமியின் முகத்தை பார்த்தான். அவள் முகத்தில் எதுவித உணர்வுகளும் தெரியவில்லை. கண்கள் கலங்கியது.

“எனக்குத் தெரியும் இது உங்களால் உடனடியாக எடுக்க முடியாத முடிவென்று. நீங்கள் இருவரும் அவசரப்படாது ஆழ்ந்து சிந்தித்து பேசி முடிவு எடுத்து விட்டு உஙகள் இருவருக்கும் சம்மதம் இருந்தால் என்னை வந்து சந்தியுங்கள். பின் மற்றவையை நான் கவனிக்கிறேன்’” என்றாhர் டாக்;டர் சந்திரன்.

*******

கட்டிலின் நேர் எதிரான சுவரில் தொங்கிய படத்தில் சிரித்தபடி பெரும் விரலை சூப்பயிபடி இருந்த அழகிய குழந்தையைப் பார்த்து பெருமூச்சு விட்டார்கள் தேவனும் அபிராமியும். இது போல இருக்குமா டாக்டர் சொன்ன குழந்தை? இரவு இரவாக தேவனும் அபிராமியும் ஒரு முடிவுக்கு வர முடியாது தவித்தது அந்த படத்தில் இருந்த குழந்தைக்கு தான் தெரியும். நடப்பது நடக்கட்டும். எனக்கும் அவருக்கும் தேவை என்மேல் உள்ள மலடி என்ற பட்டத்தை போக்க ஒரு குழந்தை, என்று அபிராமி மனதில் ஒரு முடிவுக்கு வந்தவள் போல் கண்களைத் துடைத்து கொண்டு

”அத்தான் நாளைக்கு டாக்டர் சந்திரனுக்கு டெலிபோன் செய்து நாங்கள் வந்து சந்திப்பதாக சொல்லுங்கள்” எனறாள் அபிராமி மனத் தைரியத்துடன்.

“அதைத்தான் அபிராமி நானும் தீர்மானித்தனான். நான் நினைக்க நீ சொல்லிப்போட்டாய்” என்றான் தேவன் அமைதியாக.

படத்தில் இருந்த குழந்தை அவளைப்பார்த்து சிரிப்பது போல் இருந்தது அவனுக்கு. அவளுக்கு தன் வயிற்றில் அதே போல் குழந்தை ஒன்று ஊர்வது போன்ற உணர்வு. தான் தாயாகப் போகிறேன் என்ற பெருமை முகத்தில் பிரதிபலித்தது. இனி சமூகம் தன்னை மலடி என்று ஒதுக்கிவைக்க மாட்டாது. சடங்குகளில் எனக்கு ஒரு இடமுண்டு.

******

ஒரு வருடத்துக்குள் அபிராமி ஒரு அழகிய ஆண் குழந்தைக்குத் தாயானள். தங்களை பார்க்க வந்த சந்திரனுக்கு நன்றி தெரிவி;க்கும் முகமாக தங்கள் இரு கைகளை கூப்பி தேவனும் அபிராமியும் வணங்கினர்.

“ இதென்ன பழக்கம் தேவன்;. என் கடமையைத் தான் நான் செய்தனான். நீ என் நண்பன். அதை மறந்துவிடாதே. நீ எனனை கும்பிடவுது எனக்கு மனதுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. “ என்று கூறியபடி அவனது இரு கரங்களையும்; பற்றி கீழே தாழ்த்தினாhர் சந்திரன
;.
“ டாக்டர் இவர் படிப்பு இன்னும் நான்கு மாதங்களில முடியப் போகிறது. அதற்குப் பிறகு நாங்கள் ஊருக்குத் திரும்ப இருக்கிறோம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தங்களுக்கு பேரப்பிள்ளை கிடைத்ததையிட்டு பெரிய மகிழ்ச்சி. கோல் எடுத்து பேசிச்சினம். “ என்றாள் அபிராமி.

“ அவர்களுக்கு ஏதாவது சொன்னீர்களா?” என்றார் சந்திரன்.

“ உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நாங்கள் மீறுவோமா?” என்றார் தேவன்.

“ நல்லது. நானும் மாற்றலாகி கிலாஸ்கோவுக்கு போகிறேன். இனி உங்களைச் சந்திப்பேனோ தெரியாது. அதனால் உங்கள் குழந்தைக்கு என் சிறிய பரிசு கொடுக்க விரும்புகிறேன்.” என்று ஒரு கடித உறையை அபிராமியிடம் சந்திரன் கொடுத்தார்.

“ என்ன டாக்டர் இது?.. நாங்கள் அல்லவா உங்களுக்கு பரிசு தரவேண்டும் “ என்றாள் அபிராமி.

“ சந்திரன் நீர் செய்த இந்த பெரிய உதவி போதாது என்று இதுவுமா?” தேவன்; உணர்ச்சி வசப்பட்டு நடுங்கும் தன்; கரங்களினால் சந்திரனின் கைளைப் பிடித்தான்.

சந்திரன் பதில் பேசாது குழந்தையை தேவனிடம் இருந்து வாங்கினான். குழந்தையின் மிருதுவான கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு தன் கண்கணில் வந்த கண்ணீரைத் அவர்கள் காணாத வாறு துடைத்துக் கொண்டு

“ சரி நான் வாறன் எனக்கு வேலையிருக்கு” என்று பதிலை எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான். அவர் நடந்த விதம் அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. டாக்டர் சந்திரன் அறையைவிட்டு வெளியே போய் சில நேரத்துக்குப் பின் தேவன் கடித உறையை அபிராமியிடம் வாங்கிப் பிரித்தான். அதனுள் சிறு கடிதமும் ஒரு பத்திரம் இருந்தது. கடிதத்தில் இருந்ததை தேவன் வாசித்தான்

அன்பின் நண்பன் தேவனுக்கும் சகோதரி அபிராமிக்கும்.
இதோடு என் பெயரில் என் இறந்து போன பெற்றோர் எழுதி சொத்துக்கைளை எல்லாம் உங்கள் குழந்தையின் பெயரில் எழுதி வைத்திருக்கிறென். இனி எனக்கு சொத்துக்கள் தேவையில்லை. நான் மறுமணம் செய்து கொள்ளப் போவதில்லை. என் வாழ்வில் எனக்கென ஒரு வசந்திதான். இது உங்கள் மகனுக்கு என் பரிசு. ஒரே ஒரு வேண்டு கோள். என் மனைவி விபத்தில் இறக்கும் போது அவள் ஆறுமாதம் கற்பம். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அவள் வணங்கும் முருகன் பெயரான “அழகன்” என்ற பெயர் வைக்க இருந்தோம். ஆனால் அது எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. அதனால் அழகான உங்கள் மகனுக்காவது அந்தப் பெயரை வைப்பீர்கள் எனத் தாழ்மையுடன் செய்து கேட்டுக்கொள்கிறேன். அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்கள்?

இப்படிக்கு
சந்திரன்

கடிதத்தினதும் உயிலினதும் அர்த்தங்களை அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் பகிர்ந்து கொள்ளவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இப்படியும் ஒரு மனிதனா என்றது அவர்கள் இருவரினதும் உள்ளங்கள்.

******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (28-Aug-16, 6:13 am)
Tanglish : maladai
பார்வை : 442

மேலே