மனம்

மனம்......
அது
எங்கு இருக்கிறது
என்று தெரியவில்லை
ஆனால்
கனமாய்க் கனக்கிறது
சுமக்க முடியாமல்.

நிமிடத்திற்கு ஒன்றாய்
சுழட்டி அடிக்கிறது
எண்ணச் சூறாவளிகள்
நின்றபாடில்லாமல்
மனம்.....
அது
எங்கு இருக்கிறது
என்று தெரியவில்லை
ஆனால்
அமைதியை தேடுகிறது
அலைகடல் அகதியாய்.

கருமையாகவே
தொடர்கிறது பொழுதுகள்
ஒரு குருடனின்
காட்சிகள் போல்
விழி மூடவிடாமல்
பழிவாங்குகிறது
இரக்கமற்ற இரவுகள்
மனம்.......
அது
எங்கு இருக்கிறது
என்று தெரியவில்லை
ஆனால்
விடியலுக்காய் ஏங்குகிறது
ஓர் ஊர்குருவி போல்

கோடி மக்கள்
கூட இருந்தாலும்
தனிமைச் சிறையில்
அடைபட்டுக் கிடக்கிறது ஆவி
ஓர் ஆயுள் கைதியாய்
மனம்.......
அது
எங்கு இருக்கிறது
என்று தெரியவில்லை
ஆனால்
ஓரு கோடி
சிறகுகள் தேடுகிறது
கூண்டுக் கிளியாய்

ஓராயிரம் தோட்டாக்கள்
பாய்ந்து விட்டாற் போல்
நாடி நரம்பெல்லாம்
ஓசையின்றி பரவும்
வலியின் அதிர்வுகள்
மனம்.......
அது
எங்கு இருக்கிறது
என்று தெரியவில்லை
ஆனால்
அறுத்து விடத் துடிக்கிறது
உயிர் கொடியை
நிறுத்தி விட நினைக்கிறது
மெய் மூச்சை
ஓர் யமதர்மனாய்!!!!

எழுதியவர் : ஹரிணி நரேன் (30-Aug-16, 6:01 pm)
சேர்த்தது : Harini Naren
Tanglish : manam
பார்வை : 190

மேலே