அறிவியலாகட்டும் நிவாரணப் பணிகள்

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளங்கள் இந்தியாவைப் பாடாய்ப்படுத்துகின்றன. வருடா வருடம் ஏற்படும் இந்தப் பருவ காலங்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றை எதிர்கொள்வதற்கான அணுகுமுறை அறிவியல்பூர்வமாக மாற வேண்டும்.

நாட்டில் 1978 முதல் 2006 வரை 2,443 முறை வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக, வெள்ளம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதில் சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வருடமும் இதே கதைதான். ஐந்து மாநிலங்களில் மக்கள் கனமழையால் தவிக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களில் பலரைத் தேசியப் பேரழிவுப் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றத்தான் செய்கின்றனர். எனினும், கிராமப் பகுதிகள் அதிகமாக உள்ள பிஹார் போன்ற மாநிலங்களில் இத்தகைய படைகளின் உதவி முழுமையாகக் கிடைப்பதில்லை.

பொதுவாகவே, வெள்ளத்தின்போது நிவாரணப் பணிகளும் மீட்புப் பணிகளும் தாமதமாகத்தான் நடைபெறுகின்றன. வெள்ளத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விஷயத்தில் அரசு நிர்வாகத்தின் திறன்கள் மோசமாக இருக்கின்றன. நிவாரண முகாம்களை அமைப்பதிலும் நெருக்கடிக் காலங்களில் மருந்துகள், உணவுப் பொருட்களை வழங்குவதிலும் போதிய அக்கறை காட்டப்படுவதில்லை. நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. இவையெல்லாம் போர்க்கால அவசரத்தோடு செய்ய வேண்டியவை.

உதவி தேவைப்படுகிற நெருக்கடியான நேரங்களில் அரசு நிர்வாக அமைப்புகள் செயலற்றுவிடுகின்றன. இத்தகைய முக்கியமான பணிகளில் அன்றாடம் செயல்படக்கூடிய அமைப்புகள் முழு அளவு ஆற்றலோடு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் அவசர உதவி தேவைப்படும் காலங்களில் அவற்றை மேம்படுத்த முடியும். இந்தியாவில் ஏற்படும் வெள்ளத்தின் பாதிப்புகளைக் குறைப்பதற்கு, கங்கை உள்ளிட்ட ஆறுகளும் அவற்றின் துணை ஆறுகளும் மழைக் காலங்களில் எவ்வாறு இருக்கின்றன என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளும் முழுமையான அறிவியல் பார்வை தேவைப்படுகிறது. வெள்ளம் பற்றிய பிரச்சினையைச் செயற்கைக்கோள் படங்கள், நிலம் பற்றிய தகவல்கள் போன்ற முன்னேறிய தொழில்நுட்பங்கள் அடிப்படையில் ஆய்வுசெய்து அரசாங்கம் புரிந்துகொள்வதில்லை. நம்பகத்தன்மை இல்லாத தகவல்களையும் உள்ளூர் அளவிலான ஆய்வுகளையும்தான் பொதுவாக அரசு கணக்கில் கொள்கிறது.

பிஹார் மாநிலத்தில் கோசி ஆறு தனது பாதையை அடிக்கடி மாற்றிக்கொள்வது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கோசி ஆறு பெரும் அபாயமாக இருக்கிறது. சீறிவரும் வெள்ளத்தைத் தாங்கும் அளவுக்கு அதன் கரைகள் இல்லை. மேற்கு வங்கத்தில் உள்ள ஃபராக்கா அணையின் காரணமாக கங்கை ஆற்றில் வண்டல் மண் அதிகம் படிந்திருப்பதால், நீர்மட்டம் அதிகரிப்பதாகத் தொடர்ந்து பேசிவருகிறார் பிஹார் முதல்வர் நிதீஷ்குமார். அந்த அணையை அகற்றிவிட்டு கங்கை ஆற்றைத் தாராளமாகப் பாய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார். அது வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பை இன்னும் அதிகரிக்கவே செய்யும். நூறாண்டுகளுக்கும் மேலாக, கோசி ஆறு தொடர்பான விவாதங்களில் அணைகள், கால்வாய்கள் போன்ற பல தீர்வுகளைப் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே அது இன்றும் தொடர்கிறது.

வருடந்தோறும் ஏற்படும் வெள்ளத்தால் பாதிப்புகள் தொடர்கின்றன. மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள், வெள்ளத்தைத் தணிக்கும் பணிகள் ஆகியவற்றை நவீனமயமாக்கத் தேவையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். வருமுன் காக்கும் அறிவியல் பணிகளாக வெள்ள நிவாரணப் பணிகளை வளர்த்தெடுக்க சிறந்த வழி அதுதான்!

எழுதியவர் : (2-Sep-16, 4:00 am)
பார்வை : 97

மேலே