எங்கே என் கிராமம்

பச்சை வண்ண சீலை மேல
வெள்ளை நிற சிமிக்கி போல
எக்குத்திக்கும் பசுமையாக பரந்திருக்கும் - வயல்மேல்
கொக்குக்கூட்டம் குடித்தனமாய் குடியிருக்கும்

உழவுமில்லை உழைப்புமில்லை
எழவு வீடு போலாச்சு
வெள்ளை நிற சீலை கட்டி
பச்சை ஊரு விதவையாச்சு

கடவுசீட்டு வாங்கிக்கிட்டு
கொக்குக்கூட்டம் பறந்து போச்சு
வெற்றிடத்தில் கல்லை நட்டு
வீட்டுமனை பிரிச்சாச்சு

அதிகாலை பால்காரர்
அழகு மணியோசை இல்லை
ஆவி பறக்க அம்மா கொடுக்கும்
ஐந்துமணி தேநீருமில்லை

காலையில பல் துலக்க
வேலங்குச்சி எங்குமில்லை
தெம்பாக குளிச்சிடத்தான்
பம்புசெட்டு ஏதுமில்லை

அறிவுடனே அந்த கால
பெரியவங்க வெட்டி வச்ச
எரியெல்லாம் இருக்கும் இடம் மறைஞ்சாச்சு - ஏரி
கரையெல்லாம் கருவேல மரமாச்சு

காணாப்போன கிணத்தைத்தேடி
கண்டுபிடிச்சு கையில் கொடுக்க
காவலிடம் புகார் கொடுக்கும்
காட்சியைத்தான் பார்த்துபுட்டு
கைகொட்டி வாய்விட்டு சிரிக்கின்றோம் -அதன்
கருத்தைத்தான் கனவாக மறக்கின்றோம்....

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (5-Sep-16, 1:49 am)
Tanglish : engae en giramam
பார்வை : 239

மேலே