மனசு பேசுகிறது மனிதனாக வாழ்வோமே
இதயத்தை அடகு வைத்துவிட்டு இயங்கும் சூழலில்தான் இன்றைய மனிதம் இருக்கிறது. ஐந்தறிவு ஜீவன்களெல்லாம் ஒன்றுக் கொன்று உதவி செய்து வாழப் பழகிக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் மட்டுமே உதவும் மனப்பான்மையை தீயிலிட்டு விட்டு உற்சாகமாக வலம் வருகிறோம். நம்ம மனசுக்குள் இப்பல்லாம் இணையம் புகுந்திருச்சு... எது நடந்தாலும் அது நல்லதோ... கெட்டதோ முகநூலிலும் டுவிட்டரிலும் பதிவு செய்து லைக்குக்களை அள்ள வேண்டும் என்பதே மனசுக்குள் நிறைந்து நிற்கிறது. இதுதான் இன்றைய வாழ்க்கையும் ஆகிப் போய்விட்டது என்பதே உண்மை.
சமீபத்தில்தான் எத்தனை நிகழ்வுகள்... நம் மனிதாபிமானத்தை அடகு வைத்துவிட்டு செல்போனில் படம் பிடித்துக் கொண்டு நின்றதை உலகுக்கு படம் பிடித்துக்காட்டிய நிகழ்வுகள்... எங்கே போகிறோம் என்பதை எடுத்துச் சொல்லிய நிகழ்வுகள்... அது கொலைகளாகட்டும்... கொள்ளைகளாகட்டும்... வாழ்க்கைப் பிரச்சினைகளாகட்டும் எல்லாவற்றிலும் நம் செயல்பாடுகள் ரொம்ப மோசமாகத்தான் இருக்கிறது. அதை விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஜாதி, மத பிரச்சினைகள்... ஊடகங்களே இன்ன சாதி என்பதை சொல்லிச் செய்தி போடுவதுதான்.
சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் இந்தியாவில் இப்படி நடக்குது... அப்படி நடக்குது உதவுவார் யாருமில்லை என்று என்.ஐ.ஆர். ஆட்கள் அமெரிக்காவிலிருந்து லண்டனில் இருந்தும் பேசுகிறார்கள். இங்கு எல்லாம் நல்லாத்தான் இருக்குது... நீங்க கூவுறதை விடுங்க என்று கண்டனப் பதிவை வெளியிட்டிருந்தார். எல்லாவற்றிற்கும் கூவுபவர்கள் மீதான கோபமாகக் கூட அது இருக்கலாம்... ஆனாலும் மனிதாபிமானமுள்ளவன் கூவத்தான் செய்வான்... அவரின் கூற்றைப் போல எல்லாம் நல்லா நடந்தால் சந்தோஷமே... அப்படி எல்லாம் நடக்கும் பட்சத்தில் எதற்கெடுத்தாலும் கூவுபவன் பைத்தியகாரனாகவே இருப்பான். இவ்வளவு பிரச்சினைகள் சுழன்று அடிக்கும் போது நல்லது எப்படி நடக்கும்..?
இறந்த மனைவியை கொண்டு செல்ல மருத்துவமனை ஆம்பூலன்ஸ் ஏற்பாடு செய்து தராத நிலையில்... அதுவும் இலவச ஆம்பூலன்ஸ் வசதியை மாநில அரசு செய்து கொடுத்திருந்தும்... அது குறித்து அறிந்திராத மலைசாதி மனிதனுக்கு தாங்களே முன் வந்து இலவச ஆம்பூலன்சை ஏற்பாடு செய்து கொடுக்காத மருத்துவமனையில் எப்படி மனிதாபிமானம் இருக்கும்... அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஊரை நோக்கி, வயதுக்கு வந்த பெண் குழந்தையுடன் இறந்த மனைவியை தோளில் சுமந்து நடக்க ஆரம்பித்து விட்டான். வழியெங்கும் செல்போனைத் தூக்கிக் கொண்டு நிற்கும் நம்மவர்கள் யாருமே உதவி செய்ய வேண்டும் என்று நினைக்காதது வேதனையே... விரட்டி விரட்டி படமெடுத்துப் போட்ட தொலைக்காட்சி நிருபர், கலெக்டருக்குச் சொல்லி அவர் மூலம் ஆம்பூலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த மலைசாதி மனிதரைச் சென்றடைந்த போது பனிரெண்டு கிலோ மீட்டர் கடந்திருந்தார். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்... தன்னில் பாதியான மனைவியின் சடலத்தை தனது தோளில் சுமக்கும் போது அந்த மனிதன் என்ன நினைத்திருப்பான்..? மலர்கள் தூவி ஊர்வலமாக இறுதியாத்திரை செல்ல வேண்டிய அம்மா, துணியில் சுற்றி அப்பாவின் தோளிலும்... தூக்க முடியாத தருணத்தில் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சாலையோரத்தில் கிடத்தியும்... பயணிக்கும் போது அந்தப் பெண் குழந்தை என்ன நினைத்திருப்பாள்..? அவளின் மனநிலையை யோசிக்கும் எப்போது இதயம் வலிக்கிறது... எவ்வளவு கொடுமை இது...? எதிரிக்கும் வரக்கூடாத கொடுமை இது.... இங்கே மனிதாபிமானம் எங்கே போனது... எல்லாம் நல்லாத்தான் நடக்குதுன்னு சொன்னோமே... இந்தப் பிரச்சினையில் என்.ஆர்.ஐ. மட்டுமல்ல நாம் எல்லாரும்தானே புலம்பித் தீர்த்தோம்.
இறந்த மூதாட்டியின் உடம்பை இடுப்போடு ஒடித்துக் கட்டித் தூக்கிப் போன நிகழ்வில் அந்த மனிதர்களிடம் மனிதாபிமானம் இருந்ததா...? இல்லையே..? இவர்கள் சரியாகத்தான் செய்தார்கள் என்று சொல்ல முடியுமா..? இப்படி நடக்கிறதே தட்டிக்கேட்க ஆளில்லையா என்று கேட்டால் தப்பா...? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்... எதை நோக்கிப் பயணிக்கிறோம்..? இன்னும் சில வருடங்களில் வீட்டுக்குள் ஒரு நிகழ்வு என்றாலும் நாம் செல்போனில் வீடியோ எடுக்க மாட்டோம் என்பது என்ன நிச்சயம்..?
வீட்டில் பிரசவித்த பெண்ணை உடம்பு முடியாத நிலையில் மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல, வாகன வசதி ஏற்படுத்திக் கொள்ள வசதியற்ற நிலையில் பேருந்து பயணித்து... பயணத்தின் போது அந்தப் பெண் இறக்க, பயணிகளும் டிரைவரும் பொணத்தைக் கொண்டு போக முடியாது என்று சொல்லி போக்குவரத்து அற்ற ஒரு இடத்தில் இறக்கிவிட்டுச் செல்ல, அந்த வழியாக வந்த வழக்கறிஞர் ஒருவர் போலீசுக்கு போன் செய்து அவர்களும் மறுத்துவிட, தன்னோட நண்பர்கள் உதவியுடன் அவர்களின் வீட்டில் கொண்டு போய் விட்டதை எவ்வளவு பேர் அறிவோம்... பேருந்தில் இருந்த மனிதர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இல்லாத மனிதாபிமானம் அந்த வழக்கறிஞருக்கு இருந்ததில் மகிழ்ச்சி அடைவோம். அவரை வாழ்த்துவோம்... இந்த விஷயத்தில் மனிதாபிமானமற்ற மனிதர்களை விட உதவிய அந்த மனிதரால் நல்லது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். இதற்கு யாரும் பொங்கிப் பதிவிடவில்லை என்பதையும் அறியலாம்.
இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் எல்லாப் பிரச்சினைகளையும் ஆளும் பாஜக அரசின் மீது அள்ளித் திணிப்பதுதான்... பிரதமரின் செயல்பாடுகளைக் குறித்து ஆயிரத்தெட்டு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம்... அவர் ஊர் சுற்றலாம்... அதன் பின்னணியில் வளர்ச்சிக்கான விதை இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்... அவர் வாழ்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். நாம் அரசியல் பேசுவதற்கான கட்டுரை இதுவல்ல... ஆனாலும் ஒருவனுக்கு முள் குத்தினால் குத்திய முள்ளை ஏன் அங்கே அவர் போட்டார் எனப் பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒரிசாவில் ஆம்பூலன்ஸ் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன மருத்துவமனை நிர்வாகத்தின் செயல், தொலைக்காட்சியில் செய்தியாகி கலெக்டருக்குப் போன பின்னரே ஆளும் அரசாங்கத்திற்குத் தெரிய வந்திருக்கும். அப்படியிருக்க பிரதமரைத் திட்டும் நம்மை என்னவென்று சொல்வது..? குறை காண வேண்டியதுதான்... ஆனால் அதைக் காண வேண்டிய இடத்தில் காண வேண்டும்... எல்லாத்துக்கும் பொங்கும் மகளிர் அமைப்புக்கள் கூட சமீப காலமாக சினிமாவுக்கு பொங்கும் அளவுக்கு பொதுப்பிரச்சினைகளில் பொங்குவதில்லை.
கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட நாலு வயதுக் குழந்தையை தாய் கொன்றாள்ன்னு செய்தி வாசிக்க நேர்ந்தது. நாலு வயதுக் குழந்தை தட்டிக் கேட்குமா என்பது செய்தி வெளியிட்ட நிருபருக்குத் தெரியாமலா இருக்கும். இந்தக் கொலை எதற்கானது என்பதும் அவருக்குத் தெரியும்... இருந்தாலும் பத்திரிக்கை பரபரப்புக்காக இப்படியான செய்திகளைப் போடுகிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்... நேற்று ஒரு செய்தி... ஐந்து வயதுப் பையனை வெட்டிக் கொன்றிருக்கிறான் ஒரு மனிதன்... இவர்களுக்கு எல்லாம் சரியான தண்டனை... அரபு நாடுகளில் கொடுப்பது போல் கொடுத்தால் அடுத்து ஒருவனும் தவறு செய்ய மாட்டான். நமக்கு இணையத்தில் வேலை இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இருப்பைச் சேர்க்க வேண்டிய வேலை இருக்கிறது. காவல்துறையினருக்கோ அரசியல்வாதிகளின் பின்னே அலையவும் அஞ்சுக்கும் பத்துக்கும் கை நீட்டவும் வேண்டிய முக்கிய வேலை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் மனிதாபிமானமுள்ள ஒருவன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கத்தான் செய்வான். பொங்கதே என்று சொல்பவன் இந்தப் பிரச்சினைகளில் போராட வேண்டியதுதானே...
இது ஒரு பக்கம் என்றால் நாம் ஜாதி, மதங்களில் காட்டும் நிலைப்பாடு பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒரு மதத்தைக் குறித்து தரக்குறைவாக பேசும் முன்னரோ எழுதும் முன்னரோ சற்றே சிந்திக்க வேண்டும் ஆனால் நாம் அதைச் செய்வதில்லை. முகநூலில் ஆளாளுக்கு தாக்கவும் தூக்கவும் செய்கிறார்கள். நான் மதிக்கும் நண்பர் ஒருவர் கோகுலாஷ்டமியின் போது கிருஷ்ணரைப் பற்றி தவறான பதிவொன்றை இட்டிருந்தார். அதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்து மதக் கடவுள்களைப் பற்றி அவர்களே தரக்குறைவாக எழுதும் போது நாம் எதற்காக அதையே எழுதி நம் மதத்தின் மீது சேறை வாரி வீசிக்கொள்ள வேண்டும் என்ற அட்வைஸ் வேறு. அடேங்கப்பா..! அடுத்த மதக் கடவுளை தரக்குறைவாய் பேசிவிட்டு என்ன ஒரு நல்ல அறிவுரை.
நம் மதத்தை... நம் மத நம்பிக்கையை... நம் தெய்வத்தைக் குறித்து என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்.... மற்ற மதங்குறித்தோ... அவர்களின் தெய்வ நம்பிக்கை குறித்தோ கேவலமாக எழுத என்ன வேண்டி வந்தது...? ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு விதமான கடவுள் நம்பிக்கைகள் உண்டு... அது குறித்து கேள்வி எழுப்பத் தேவையில்லையே... அப்படிக் கேள்வி எழுப்புவதால் நமக்கு என்ன லாபம்..? இந்த மத அரசியல் செய்பவர்களின் எண்ணமே ஒற்ருமையாய் இருக்கும் நமக்குள் அடித்துக் கொண்டு சாவதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான். இவற்றிற்கு எல்லாம் நாம் செவி சாய்த்து நம் சுயத்தையும் நம் நட்பையும் இழப்பதில் இல்லை வாழ்க்கை... நாம் நாமாக இருப்போம்... கொளுத்துபவர்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கட்டும். எடுத்தால்தானே வெளிச்சம் பரவும்... அங்கேயே கிடந்தால் அதுவே அணைந்து விடும் என்பதை உணர்ந்து அதன்படி நடப்போம்.
எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்... நாமும் நல்லாவே இருப்போம்... சாதிகளை எல்லாம் மதங்களாக்கிப் பார்க்கத் துடிக்கும்மனிதர்களுக்கு மதம் பிடித்திருக்கிற காரணத்தால்தான் மனிதம் செத்துவிட்டது போலும். பிடித்த மதத்தை உங்களோடு வைத்துக் கொண்டு பிடிக்காத செயலை செய்வதை தவிர்ப்போம்.
மனிதனாய் வாழ்வோம்... மனிதாபிமானத்தோடு வாழ்வோம்...
-'பரிவை' சே.குமார்.