சுதந்திரம் என்பது உணர்வு

சிறு சங்கிலியில்
கட்டிக்கிடக்கும் யானையாய்
கூண்டு திறந்தும்
பறக்காத பறவையாய்
அடிமைத்தனத்திற்கு அடிமைப்பட்டு நாம்

அடிப்படை உரிமை ஆறும்
கையெழுத்திட்ட காகிதத்தில்
அனுபவிக்க அறியோம் நாம்

தட்டி கேட்க துணிவிருந்தும்
தட்டி கழிப்போம் நாம்

வீரம் இருந்தென்ன
தீரம் இருந்தென்ன
தவறுகளை சகிப்போம் நாம்

அன்று அந்நியநாட்டவருக்கு
இந்தியாவிற்குள் அடிமை
இன்று நாடு கடந்து
வேலை
மீண்டும் அவர்களுக்கு அடிமை நாம்

தன் வீடு
தன் குடும்பம் என
சுயநலத்திற்கு அடிமை நாம்

நம் நாடு
நம் மக்கள் என்ற
உணர்வு நம் அனைவரின்
மனதில் தோன்றும்
நாளே சுதந்திர நாள்

சுயநல சங்கிலி அறுத்து
ஜாதியை தீயில் இட்டு
மதத்தின் மதத்தை அடக்கி
மாநில பூசல் ஒடுக்கி
சகோதரத்துவம் பெருகி
பொதுவுடைமை பேணி
பெறுவோம் உண்மை சுதந்திரம்


-----------ரா தி ஜெகன்

எழுதியவர் : ரா தி ஜெகன் (12-Sep-16, 2:28 pm)
பார்வை : 1455

மேலே