என் இனமே, எங்கே செல்கிறாய்

அறிவிலியே எல்லாம் அழிந்துபோம்..
அமைதியாய் ஒரு நிமிடம் யோசித்துப்பார்..!

தண்ணீரும் கண்ணீரும்
தடுத்தாலும் நிற்காது
தரம்கெட்ட மனிதா - உன்
தலைக்கெதுவும் ஏறாதோ..?

அணைமீறும் உபரியதை
அத்துமீறி விடும்போது
தமிழ்நாடு தடுத்துவிட்டால்
தாங்காது உன்பாடு...!

அரசியலின் உள்நோக்கம்
அறியாத உனக்கெல்லாம்
அல்லக்கை கூட்டத்தோடு
அன்றாடம் ஒருபிழைப்பு..!

உழைப்பதற்கு வக்கில்லை
பிழைப்பதற்கு வழியில்லை
ஒழுக்கமிலா உன்எண்ணம்
ஒழிந்துபோகும் வெகுவிரைவில்..!

தான்பெற்ற பிள்ளைகளே
தாயவளை கூறுபோட்டால்
தரையிலொரு உயிர்ஜீவன்
தானாக வந்திடுமோ..?

மார்தாங்கும் மரணத்தின்
மரபென்றால் தமிழ்வீரம்
மரியாதை சொல்லித்தரும்
மக்களுக்கா பூச்சாண்டி...!

அடித்தாலும் வலித்தாலும்
அன்பாலே பொறுக்கின்றோம்
வினையாக்கும் வித்தையதை
வியாபாரம் ஆக்காமல்..!

என் சுவாசம், என்காற்று
எல்லோரும் வாழ்ந்திருந்தால்
உள்ளிழுக்கும் உன்சுவாசம்
வெளியேற வழியேது...!

மாநிலங்கள் ஒவ்வொன்றும்
மதில்போட்டு வைத்துவிட்டால்
மானுடர்கள் வாழ்வதற்கு
மண்மீது இடமேது...?

தண்ணீரை கேட்பதற்கு
செந்நீரை கேட்கின்றாய்
கொலைகார கூட்டத்தின்
கொடும்பாவி நீயன்றோ...?

நீர் நிலம் காற்றெல்லாம்
நின்றுகூடி பேசிவிட்டால்
ஒன்றுகூட மிஞ்சாது
ஓர்நொடியில் உலகழியும்..!

சாதிமத பேதமெல்லாம்
ஓதியோதி உன்னையின்று
சாக்கடையாய் மாற்றியவன்
சத்தமின்றி சிரிக்கின்றான்..!

என்தேசம் என்மக்கள்
எல்லோரும் ஒன்றென்று
வெளிவேடம் போட்டவனோ
வேட்டுபோட்டு செல்கின்றான்..!

ஐயோ..! என் மானுடமே
அழிந்துபோக துடிக்கின்றாய்
உணர்வுகளை மதிக்காமல்
உயிரைவாங்க துடிக்கின்றாய்..!

இயற்கையின் பேரைச்சொல்லி
இனவெறியை தூண்டுபவன்
தலைகொய்வாள் நல்-அன்னை
தன்பெருமை உலகறிய..!

இயற்கையவள் சீற்றத்தை
இன்றேநாம் நினைத்திடுவோம்
பேரிடரை முன்னிறுத்தி
பேராசை கலைந்திடுவோம்...!

மானிடமே...! மானிடமே..!
மா தவம்; உன் இனமே..!
விலைபோகும் உன்மனதை
விரயமாக்கி பின்-வருந்தாதே..!


ஆம்..! நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...!

ஜாக் | Jack

எழுதியவர் : ஜாக் ஜெ ஜீ (13-Sep-16, 12:38 pm)
பார்வை : 77

மேலே