என் முதல் திருமணம்

என் முதல் திருமணம்

முருகன் கோவில்.நான் பட்டாடை உடுத்தி மாப்பிள்ளையாய் அமர்ந்திருந்தேன்.என் முகத்தில் கொஞ்சமும் மாப்பிள்ளை கலை இல்லை.என் முகம் கடுகாய் வெடித்துக் கொண்டிருந்தது.


"டேய்.. மாப்பிள்ளை கொஞ்சம் சிரியேன்டா" அருகில் நின்றிருந்த என் நண்பன் கதிர் கிண்டலாய் சொன்னான்.என்னால் சிரிக்க முடியவில்லை.எனக்கு இப்படியொரு கல்யாணம் நடக்குமென்று நான் கனவிலும் நினைத்ததில்லை.


ஒரு போதும் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கவே மாட்டேன் என்று இந்த கதிரிடம் சபதம் போட்டிருந்தேன். நான் தோற்று விட்டேன்.




என் அம்மாதான் இந்த திருமணத்தை செய்து முடிப்பதில் பிடிவாதமாய் இருந்தார்.எதிரே என் காதலி கீதா நின்று கொண்டிருந்தாள்.அடுத்த வாரம் சனிகிழமை எனக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது.காதல் திருமணம்.


இந்த திருமணம் நடப்பதற்கு கீதாவும் ஒரு முக்கிய காரணம்.கடுகடுவென்று கீதாவை பார்த்து முறைத்தேன்.அவளே என் அருகில் வந்தாள்.பச்சை நிற சேலையில் மிகவும் அழகாக காட்சி அளித்தாள்.


அந்த சேலை அணிந்ததால் அவள் அழகாக தெரிகிறாளா அல்லது அவள் அணிந்ததால் அந்த சேலை அழகாக தெரிகிறதா என்று தெரியவில்லை.சரி சரி இப்பொழுது அந்த ஆராய்ச்சி எல்லாம் எதற்கு.என் கதைக்கு வருவோம்.

"எதுக்கு மூஞ்சை உம்முன்னு வச்சிருக்கீங்க.கொஞ்சம் சிரிச்சா என்னவாம்"என்றாள்.

"இப்போ இந்த கல்யாணம் எனக்கு நடந்தே ஆகணுமா" என்று முகம் சுளித்தேன்.


"ஆமாம்.எல்லாம் நம்ம ரெண்டு பேரோட நல்லதுக்குத்தான்.நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழனும்ல,அதுக்கு இந்த கல்யாணத்தை நீங்க பண்ணியே ஆகனும்"


"எனக்கு இதுல துளியும் விருப்பமில்ல.அம்மாவோட பிடிவாதத்துக்காகவும் உனக்காகவும் தான் ஒத்துகிட்டேன்"

"கொஞ்சம் சிரிங்களேன்"

"எப்படி சிரிக்கறது.எப்படித்தான் தாலியை கட்டப் போறேனோ தெரியல"

"அடுத்த வாரம் என் கழுத்துல தாலி கட்டப்போறிங்களே,அதை அப்படியே மனசுல நினைச்சுக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு கட்டிடுங்க"

"உனக்கு என்ன, எல்லாம் ஈசியா சொல்லிடுவ.என் வாழ்க்கையில உன் கழுத்துல மட்டும்தான் தாலிய கட்டணும்னு நினைச்சுகிட்டிருந்தேன்.ஆனா இப்போ........."


"சரி சரி ஐயர் வந்துட்டார்.அவர் செய்ய சொல்றத அப்படியே செய்யுங்க.சொதப்பி வைக்ககாதிங்க" என்று மெல்ல என்னிடம் சொல்லி விட்டு சற்று தள்ளி நின்றாள்.


"ஐயர் சமஸ்கிரதத்தில் ஏதேதோ மந்திரம் படித்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அதற்குத்தான் அடுத்த வாரம் எனக்கும் கீதாவிற்கும் நடக்கவிற்கும் திருமணத்தில் தமிழில் மந்திரம் சொல்லும் ஐயரை ஏற்பாடு செய்திருந்தேன்.


ஐயர் என்னுடன் செய்யச் சொன்ன சடங்கு சம்பிரதாயங்களை செய்துக் கொண்டிருந்தேன். அம்மா என் அருகிலேயே நின்று கொண்டு என்னை கவனித்துக் கொண்டிருந்தார்.
அம்மாவுக்குத் தெரியும் எனக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்று.முடியவே முடியாது என்று எவ்வளவு பிடிவாதம் பிடித்தேன்.அம்மாவும் இந்த திருமணத்தை செய்தே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.கடைசியில் அவரின் பிடிவாதமே வென்றது.


"உன் அம்மா ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரி" என்று அப்பா உயிரோடு இருக்கும் பொழுது என்னிடம் சொன்னது அப்போது என் நினைவிற்கு வந்தது.பாவம் அப்பா அம்மாவின் பிடிவாதத்தை சமாளிக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்.


நிமிர்ந்து அம்மாவின் முகத்தைப் பார்த்தேன்.என் மனம் மாறியது.அன்பே உருவான முகம்.கொஞ்சம் அதிகமான பிடிவாதம் அவ்வளவுதான்.இந்த திருமணத்தைக் கூட என் நல்லதுக்கு தானே செய்கிறார்.அப்படித்தானே கீதாவும் சொன்னாள்.




"பொண்ணு ரொம்ப ப்ரெஷ்சா இருக்கா வெட்கப்படாமல் திரும்பி கொஞ்சம் பக்கத்துல பாரேன்" கதிர் காதோரமாய் வந்து மெல்ல கிசு கிசுத்தான்.அவனைப் பார்த்து முறைத்தேன்.


ஐயர் ஏதேதோ தானியங்களை என்னிடம் கொடுத்து அக்னியில் போடச் சொன்னார்.இன்னும் பல சாங்கியங்கலை செய்யச் சொன்னார்.


"முகூர்த்த நேரம் வந்திருச்சு, தம்பி தாலியை கட்டுங்க" என்றார் ஐயர்.வேண்டா வெறுப்பாய் தாலியை கையில் எடுத்தேன்.


என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக தாலியை கையில் தொடுகிறேன்.எனக்குள் ஒரு சிலிர்ப்பு.தாலிக்கு அற்புதமான மகிமை உண்டு என்பது உண்மைதான்.



நான் முதல் முறையாக கைகளால் தொட்டு எடுத்த இந்த தாலியை அப்படியே பாய்ந்து சென்று என் கீதாவின் கழுத்தில் கட்டிவிட்டால் என்ன என்று தோன்றியது எனக்கு.அப்படி செய்தால் அம்மா என்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்.


தாலியை கையிலேயே பிடித்துக் கொண்டு சில வினாடிகள் அப்படியே இருந்தேன். "சீக்கிரம் கட்டுங்க தம்பி " என்று ஐயர் மீண்டும் சொன்னார்.


"தாலியை கட்டுப்பா, என்ன யோசிக்கிற"இது அம்மா. .அம்மாவுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் எங்கே கடைசி நேரத்தில் தாலி கட்டாமல் எழுந்து போய் விடுவேனோ என்று.


"ம்... தாலியை கட்டுங்க.யோசிக்காதீங்க" இது கீதா.கண்களை ஒரு முறை மூடித் திறந்தேன். பெருமூச்சை இழுத்து விட்டேன்.
கைகள் லேசாக நடுங்கின.முதல் முறையாக தாலியை எடுத்து கட்டும் போது எல்லா ஆண்களுக்கும் இப்படித்தான் இருக்குமோ.


கண்களை ஒருமுறை மூடித் திறந்தேன்.பெருமூச்சை இழுத்து விட்டேன்.


சட்டென வலது பக்கம் திரும்பி குனிந்துகொண்டே தாலியை மூன்று முடிச்சு போட்டேன்.பின்னர் தான் நிமிர்ந்து பார்த்தேன்.சரியாகத்தான் தாலியை கட்டியிருந்தேன் என் அருகே வைக்கப்படிருந்த வாழைமரத்தின் தண்டில்.


"இந்த வாழைமரத்துக்கு இவனை தாலி கட்ட வைக்கறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு" அம்மா சலித்துக் கொண்டார்.


"ஒரு தடவைதான் தாலியை கையில் எடுப்பாராம்.அதையும் கீதா கழுத்துல மட்டும்தான் கட்டுவாராம்.பெரிய ஏக பத்தினி விரதன்" இது கதிர்.


ஐயர் வாழை மரத்தை இரண்டு துண்டாய் வெட்டி சாய்த்தார். மீண்டும் சில மந்திரங்களை சொல்லி என்னை சொல்லச் சொன்னார்.


எனக்கு லேசாய் வேர்த்திருந்தது.பதற்றத்தினாலா கோபத்தினாலா தெரியவில்லை.கீதா என்னை பார்த்து கேலியாய் சிரித்தாள்.


அம்மாவையும் கீதாவையும் பார்தேன்."இப்போ திருப்தியா" என்றேன்.


"இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு" என்றார் அம்மா."இனி நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஆயுசுக்கும் நான் மட்டும்தான் உங்க மனைவி" கீதாவின் குரலில் ஒரு திருப்தி தெரிந்தது.
எல்லாம் என் திருமண ஜாதகத்தில் எனக்கு இரண்டு தாரம் என்று இருப்பதால் வந்த வினை.எங்கே எனக்கு இரண்டு மனைவிகள் அமைந்து விடிவார்களோ என்று அம்மாவுக்கு பயம்.கீதாவிற்கு அதைவிட அதிகமான பயம்.


எனக்கும் வாழைமரத்திற்கும் திருமணம் செய்து வைத்து, அந்த வாழைமரத்தை இரண்டு துண்டாக வெட்டி பரிகாரம் செய்து விட்டால் என் ஜாதகத்தில் இருக்கும் இரண்டு தாரம் என்ற தோஷம் கழிந்து விடுமாம். ஒரு ஐயர் சொல்லியிருகிறார்.


நான் இந்து மதத்தை மதிப்பவன்.ஆனால் ஜாதகத்தில் ஏனோ எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை.


அம்மாவுக்கும் கீதாவுக்கும் ஜாதகத்தில் அதீத நம்பிக்கை. நான் வாழைமரத்திற்கு தாலி கட்டி பரிகாரம் செய்தே தீர வேண்டுமென இருவரும் என்னிடம் ஒரே பிடிவாதம் செய்தனர்.

நான் முடியவே முடியாது என்றேன்.இறுதியில் அம்மாவின் பிடிவாதத்திற்காகவும் கீதாவின் மன திருப்திக்காகவும் ஒத்துக் கொண்டேன்.


எல்லா சங்கியங்களும் செய்து முடிந்தாயிற்று. வீட்டிற்குச் செல்ல அனைவரும் காரை நோக்கி நடந்துக் கொண்டிருந்தோம்.


"பரிகாரம் செஞ்சாச்சு இனி நம்ம கல்யாண வேலைய பார்க்க வேண்டியது தான்" அருகில் நடந்து வந்த கீதா சொன்னாள்.

"என்னோட இரண்டாவது கல்யாணத்தப் பத்தி சொல்றியா" என்றேன்.

"என்ன இரண்டாவது திருமணமா" குழப்பமாய் கேட்டாள்.

"ஆமா இப்ப எனக்கும் அந்த வாழைமரத்துக்கும் நடந்ததே அதுதான் என் முதல் திருமணம்"

"ஓ... அப்படியா அப்போ நான் "


"நீ என் ரெண்டாவது மனைவி.நான் முதல் முறைய தாலி கட்டிய அந்த வாழைமரம் தான் என் முதல் மனைவி"


"வற்புறுத்தி வாழைமரத்துக்கு தாலி கட்ட வச்சுடோம்னு சொல்லி சாருக்கு ரொம்ப கோபம் போல"

"ஆமாம்.எனக்கு விருப்பமிலாத விசயத்தை செய்ய வச்சுட்டீங்கள, அதனால நீ எப்பவுமே என் ரெண்டாவது பொண்டாட்டிதான்" என்றேன் முகத்தை சுளித்துக் கொண்டு.


ஜாதகத்துல உள்ளதை எப்பவுமே நம்பனும்.அது அப்படியே நடக்கும்" என்றாள் கீதா.நான் அவளை மேலும் கீழும் ஏளனமாய் பார்தேன்.


"என் ஜாதகத்துல கூடத்தான் மகாலக்ஷ்மி மாதிரி அழகான பொண்ணு எனக்கு மனைவியா வருவான்னு இருக்கிறதா எங்கம்மா சொன்னாங்க.நடந்ததா இல்லையே.நீதான எனக்கு கிடைச்ச."ஒரு கேலி சிரிப்போடு அவளைப் பார்த்து சொன்னேன்.

"என்ன சொன்னீங்க" என்று செல்லமாய் என் காதை பிடித்து திருகினால் என் அழகு தேவதை என் வருங்கால மனைவி கீதா.

எழுதியவர் : காயத்திரி த/பெ முனிசாமி (14-Sep-16, 10:25 am)
பார்வை : 486

மேலே