அவள்தான் நமது உலகம் கவிஞர் பழனி பாரதியின் மகளிர்தின கவிதை
அவள்தான் நமது உலகம்
அவளோ
தன் தாய்வீட்டின்
கதவு தட்டும் ஓசையைக்கூட
பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள்
அவள் வாழ்ந்த வீட்டுக்கும்
வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும்
இடையில்….
மழை…வெயில்…காற்று
வானம்…பூமி…பறவை…
கனவுகள்…தோழிகள்…
குல தெய்வமும்கூட
மாறித்தான் போய்விட்டன
அவளது..
ஒரு கண்ணில் சூரியன்
ஒரு கண்ணில் நிலவு
இரண்டு விழிகளையும் மூடி
அவள் உறங்கியதே இல்லை…
அவளது..
ஒரு மார்பில் தாய்ப்பால்
ஒரு மார்பில் காமத்துப்பால்
இரண்டுக்குமிடையில்
அவள் இதயம்
அவளுக்காகத் துடித்ததே இல்லை
அவளது பெயரில் பாதி..
இப்போது கணவனுடையது
அவளது உயிரில் பாதி
இப்போது குழந்தைகளுடையது
அவளின்றி அசையாது ஓரணுவும்
ஒரு நிமிடமாவது
அவளுக்காகத் துடிக்கட்டும் நம் இதயம்
மனம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துகள்