உவப்போடு நமைவெல்லுதே
புலர்காலைப் பொழுதோடு புதுமஞ்சள் கதிரோனும்
****புடம்போட்ட பொன்னானதே !
விலகாத பனிமூட்டம் மெதுவாகக் கலைந்தோடி
****வெகுநேரம் விளையாடுதே !
மலர்வாசம் பொழில்சூழ மயங்காத மனம்யாவும்
****மதுவுண்ணும் வண்டானதே !
உலகாளும் உமையாளின் ஒளிசிந்தும் அருட்பார்வை
****உவப்போடு நமைவெல்லுதே !
நடுவானில் முகில்கூட்டம் நலமாக நடைபோட
****நதிகூட அதைக்காணுதே !
தொடுவானம் சுகமாகத் தொலைதூரம் தெரிந்தாலும்
****துடிப்போடு கண்தேடுதே !
எடுப்பான நிறத்தோடும் எழிலான கொடிப்பூவை
****இளங்காற்று தாலாட்டுதே !
மிடுக்கோடு கடலாடி விறைப்பான கரைமோதி
****விரைந்தோடி அலைபோனதே !