பாம்பிடம் கற்கணும் பாடம்

============================
பாம்பென்றால் படைநடுங்கப் பார்த்திருந்த கண்களுக்குப்
பாதுகாப்பு என்றுவந்த பாசம் – இங்கே
காம்பிருந்தும் பூக்காதக் கருணையற்றச் செடிகளிலே
காணாத பேரின்ப வாசம்
கிணற்றுக்குள் தவளைகளைக் கீழடக்கி உண்டாலும்
கேடுகெட்டச் செயல்புரியா பாம்பு – இன்னும்
கிணற்றுக்குள் தவளையைப்போல் கீழ்வாழ்வு வாழ்வோரின்
கிளைபூக்கும் பூவுக்குக் காம்பு
உதட்டோரம் விஷம்வைத்து உள்ளூற அன்புவைத்து
உயிர்காத்த நாகத்தின் உணர்வு – நாளும்
உதட்டோரம் பொய்வைத்து உள்ளத்தில் விஷம்வைத்து
உறவாடும் பேர்க்கில்லா உயர்வு.
தடுக்கிவீழ்ந்த நாய்க்குட்டித் தண்ணீரில் மூழ்காமல்
தாய்போல காத்திருந்த நாகம் – நாட்டில்
ஒடுக்கப்பட்ட இனமொன்றின் உணர்வுக்கும் மதிப்பளிக்கும்
உளம்கொண்ட எதிரியின்சி நேகம்
யுத்தத்தின் தர்மத்தைக் யௌவனமாய் மறைத்தாங்கு
யுவதிகளின் மானத்தை அழித்து – சிந்தும்
ரத்தத்தால் நாட்டுக்கு ரணம்நீங்குமென் றோரிவ்வ
ரவத்திடமே கற்றிடணும் படிப்பு
*மெய்யன் நடராஜ்
கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டிகளுக்கு காவலிருந்த நாகம் .. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதியக் கவிதை.