உறைந்து போகாமல் ஓடி வா
உறைந்து போகாமல் ஓடி வா.
பேனாவே நீ
கடைசி சொட்டானாயோ?
என் கண்ணீரை நிரப்புகிறேன்
என்னோடு கைகோரு.
உன்னால் என் தேசத்தை புரட்டமுடியுமானால்
குருதி தருகிறேன்
உறைந்து போகாமல் ஓடி வா.
கயவர்களின் கண்ணாமூச்சிகளால்
எச்சில் அட்டைகளாய் ஏழைகள்
இவர்களின் துயரை தூசுதட்டு.
உடல்கள் கூறுபோட்டு
கூறுகட்டி வைக்கப்படுகிறார்கள் ஏழைகள் இங்கே தான்.
தரிசுக்கு வான் தரும்
பரிசை
அணைகட்டி வைக்கும் அறிவாளிகள்
இங்கே தான்.
குருதியோடி குற்றுயிராய் கிடந்தாலும்
சாதி பார்த்தே மனிதநேயம் பேசும்
மாமனிதன் இங்கே தான் .
கல்விச்சாலைகளில் முட்டாளாக்கி
பட்டங்கள் கொடுக்கும்
பகட்டாளர்கள் இங்கே தான்.
மொட்டுகள் நாரேற்றப்படுகிறது
மாமன் வருகை
மணக்கோலத்தில் பள்ளிக்குழந்தை
இங்கேதான்.
கழுதை சுமக்கிறது
புத்தகங்கள் அழுகின்றன.
குழந்தை கதறுகிறது மதிப்பெண்ணுக்காக
இங்கேதான்.
எல்லா மதங்களும்
மைக்செட்டை நம்பியே நடைபோடுகிறது
மதங்களை வளர்க்க அல்ல
மனங்களைச் சிதைக்க
சினிமாவில் மட்டுமே
காதலுக்கு கண்ணில்லை சாத்தியம் .
நிஜத்தில் ஒருத்தனும்
கரைகண்டதில்ல்.
பேனாவே உன்னால் என் தேசம்
புரட்டமுடியுமானால் குருதி தருகிறேன்
உறைந்து போகாமல் ஓடி வா!!!