கும்மிப் பாட்டு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கும்மியடி கும்மியடி கும்மியடி
அம்மாவும் அப்பாவும் தெய்வமடி !
அகிலத்தை நாமும் காண்பதற்கு
அவர்களே காரணம் மறக்காதடி !
அன்றாடம் வணங்கிடு அவர்களை
அகத்தினில் வைத்திடு நீயுமடி !
கும்மியடி கும்மியடி கும்மியடி
குணத்தில் தங்கமாய் இருந்திடு !
குறையின்றி வாழ நாமெல்லாம்
குற்றமும் செய்யாமல் வாழ்ந்திடு !
குரோத உணர்வும் இல்லையெனில்
குதூகலமே வாழ்வில் நிலைக்குமடி !
கும்மியடி கும்மியடி கும்மியடி
இன்பமும் பொங்கிட வாழ்வோமடி !
இல்லாமை கல்லாமை அழிந்திட
இயன்றதை நித்தம் செய்வோமடி !
இதயங்கள் இணைந்து இவ்வுலகில்
இன்னல்கள் இன்றி வாழ்வோமடி !
கும்மியடி கும்மியடி கும்மியடி
உள்ளமும் குளிர்ந்திட கும்மியடி !
உள்ளவரை உவகையுடன் வாழவே
உத்தமராய் இருப்போம் உலகத்திலே !
உள்ளொன்று புறமொன்று இல்லாமல்
உற்சாகம் பெருக்கெடுத்து வாழ்வோமடி !
கும்மியடி கும்மியடி கும்மியடி
குலம்வாழ குடிவாழ கும்மியடி !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பழனி குமார்