விலையில்லாப் பறவை
இந்தப் பறவைக்குப் பெயரென்று
ஒன்று இருப்பதில்லை.
கரிசல் காற்றின் முகமும் ...
சிறகு குவிந்து
அடங்க ஒரு கூடும்
அதற்கு உண்டு.
பிடி தப்பிய
வண்ணத்துப் பூச்சியின்
பதற்றத்துடனேயே கழிகிறது
அதன் வாழ்வு.
விழிகளுக்குள்
அழுந்திய பாரத்தில்
உடைந்த துண்டுகளாய் இருக்கிறது
அதன் உலகம்.
காலத்தின் தழும்புகளேறி
களையற்று இருக்கிறது
அதன் முகம்.
அதன் உதிர்ந்த சிறகுகளை
சில எறும்புகள் திருடிச் செல்ல...
தழும்பேறிய அதன் அலகுகள்
ஊமையானதை
யாரும் அறியவில்லை.
அதன் மனசின் குறிப்புகள்
அதன் கூண்டுகளில் கிடைக்கக் கூடும்
தேடும் நாட்களில்.
எங்கள் வீட்டிலும் இருக்கும்
இந்தப் பறவைக்குப்.....
பொதுப் பெயர்தான்.
தனிப் பெயரில்லை.
"அம்மா"
என்றழைத்தால் போதும்.
எங்கிருந்தாலும்
திரும்பிப் பார்க்கும் அது.
அன்பின் சிறகால் வருடும்
இந்தப் பறவை....
அதன் வயதின் மூப்பில்
எங்களுக்கு ஒரு
விலையில்லாப் பொருளானாலும்
எங்களை ஒருபோதும்
விலையில்லாப் பொருளாய்
நினைத்ததே இல்லை அது.