அம்மா வரம் வேண்டும்
உன்னுள் உயிராகி உருவாகி
உலகை உணர்ந்த தருவாகி
தாலாட்டு பாடி மகிழ்வித்தாய்
சீராட்டி பாராட்டி வளர்த்திட்டாய் !
என்னுயிர் அன்னையே கேட்கிறேன்
எனக்கொரு வரம் வேண்டும் !
பசியின் குறிப்பறிந்து பாலூட்டி
நடுநிசி வேளையிலும் காத்திருந்து
சுகமிலா நேரத்திலும் வருந்தாது
உந்தன் மடிதனில் எனைகிடத்தி
உறங்காது விழித்திருந்த தாயே
எனக்ககொரு வரம் வேண்டும் !
தவறாது பள்ளிக்கு சென்றிடவே
மறவாது குளிப்பாட்டி தலைசீவி
சீருடை அணிவித்து வழியனுப்பி
சிந்தை மகிழ்ந்திட சிரித்திடுவாய்
அன்பின் உருவமான அன்னையே
எனக்கொரு வரம் வேண்டும் !
பணிவிடைகள் பலப்பல செய்திட்டு
கனிவான இதயமுடன் கவனித்தாய்
நோயுற்றக் காலத்தில் கவலையுடன்
தேய்ந்திட்ட தேகமெனிலும் வேகமாய்
அயராது பாடுபட்ட ஆசைத்தாயே
எனக்கொரு வரம் வேண்டும் !
மகனாக நீயெனக்கு பிறந்திடுவாய்
தாயாக உனக்கென்றும் நான் உழைத்திட !
பழனி குமார்