திருக்குறளும் திருமந்திரமும்-9

பொதுவாக, நாம் அறிவு எனக் கூறுவதன் உட்பொருள், சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் என்பவைகளை அறியும் அறிவுதான். இந்த அறிவினை நாம் அறிந்திட நமக்கு உதவிடும் கருவிகள் அல்லது பொறிகள் ஆகிய மெய் வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்குப் புலப்படுத்துவதாலேயே அவற்றை ஐம்புலன்கள் என்கிறோம். ஐம்புலன்களின் வாயிலாக நாம் உற்று, உண்டு, கண்டு, உயிர்த்து, கேட்டு அறிகிறோம்.

நமக்கு அறிவை உணர்த்தும் புலன்கள் இவ்வாறு இருக்க, நாம் நேற்றோ அலது அதற்கு முந்திய நாளிலோ நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை இன்றோ அல்லது பல நாள் கழித்தோ நினைவு படுத்திக் கூற இயலும். ஏனெனில், அது நாம் நினைவுடன் இருக்கும்போது நமக்கு ஏற்படும் அனுபவம் ஆகும். ஆனால், நேற்றோ அல்லது அதற்கு முந்திய நாளிலோ, நாம் கனவில் கண்டதை அவ்வாறு சொல்வது இயலாமல் போகிறது. இதற்குக் காரணம், நமது உடல்நிலை வேறுபாடே ஆகும். நமது உடலில் பூதங்கள் ஐந்து எனக் கொண்டோம் எனில் ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஆக மொத்தம் பதினைந்து தத்துவங்கள் நமது தூல உடம்பில் தொழிற்படுவன ஆகும். இந்த தூல உடம்பில்தான் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய அனைத்துக் கருவிகளும் செயல்படும். நமக்கு சூக்கும உடல் இருந்தாலும், கனவு நிலையில் தூல உடம்பில் அமைந்துள்ள கருவிகள் தொழிற்படாமை காரணமாக நாம் கனவை தெளிவாகச் சொல்ல இயலாமற் போகிறது. இவ்வகை அக உடம்பு அல்லது சூக்கும உடம்பு, கனவு நிலை அனுபவத்துக்கு உடன்படும்போது புற உடம்பு செயல்பாடின்றி கிடப்பதால், ஐம்பொறிகளும் ‘ஒடுங்கிக் கிடக்க’ “உயிர் மட்டுமே இருப்பதால் இவ்வாறு நிகழ்கிறது. இந்த வகை புலன் ஒடுக்கத்தை நாம் அறிதல் வேண்டும். அதைத்தான், ’ஒடுக்கம் அறிதல்’ எனவும் ’புலனடக்கம்’ எனவும் அவற்றை நம்மை அறியாமலே தூங்கும் போது நமது தூல உடம்பு செய்வதை, நாம் கனவு நிலையில் அல்லாமல், நினைவு நிலையிலும் அறிந்தே செய்யுங்கால், அதுவே தவம் எனக் கூறுகின்றன பழந்தமிழ் பக்தி இலக்கியங்கள்.

உண்மை விளக்கம் எனும் நூலின் ஆசிரியர் ஆகிய திருவதிகை மனவாசகங் கடந்தாரின் கூற்றுப்படி,

”உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்
கள்ளம்மிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் -- மெள்ளவே
ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புலனே ஆம்” (11)

அதைப்போலவே, பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பலில் ஒன்று, பத்தொன்பது மற்றும் எண்பத்து நான்காம் கண்ணிகளில் ஐந்தடக்கல் பற்றி அழகாகப் பாடியுள்ளார்.

”ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்) (1)

ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம் (19)

ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து வழிப்பார்த்து விழிப்பது இனி எக்காலம். (84)

திருவெண்ணெய் நல்லூர் மெய் கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் மூன்றாம் சூத்திரத்தில் ஐம்புலன் ஒடுக்கம் அறிதல் நடக்குமாயின் ஆன்மா சித்தி அடையும் என்கிறார்.

உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா

மேலும், உமாபதி சிவம், எழுதிய திருவருட்பயன் பின் வருமாறு புலனடக்கம் பற்றிப் பிட்டு வைக்கிறது.

ஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்கத்
தூங்குவர்மற்று ஏது உண்டு சொல். 91

ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம்நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக. 92

எல்லாம் அறியும் அறிவுஉறினும் ஈங்குஇவர்ஒன்று
அல்லாது அறியார் அற. 93

புலன் அடக்கித் தம்முதல்கண் புக்குறுவார் போதார்
தலம்நடக்கும் ஆமை தக. 94

திருவள்ளுவர், இறைவனை “பொறி வாயில் ஐந்தவித்தான்” எனக் கூறும்போது, ஐம்பொறிகள் வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்கநெறியில் நின்றவர் நிலைபெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் என்றுதான் கடவுள் வாழ்த்துப் பாடலில் கூறினர். திருமந்திரமும் கடவுள் வாழ்த்தில் "ஐந்து வென்றனன்" என்னும் பதத்தின் மூலம் ஐந்தவித்தான் என்பதையே சொல்கிறது.

"ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நாண்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் எழும்பர்ச்
சென்றனன் தானிருந்து தானுணர்ந் தெட்டே"

அதாவது ஐந்து வென்றவன் என்பது ஐந்து புலன்களையும் வென்றவன் எனப் பொருள்படும். ஐந்து புலன்களையும் வெல்வதற்கு இறைவன் அருள் பாலிக்கிறான் என இயம்புகிறது..

இதற்கு ஒத்த கருத்தினை,

"அவனருளாலே அவன் தாள் வணங்கி,"

என்கிறார் மாணிக்கவாசகர். ஐந்து புலன்களும் நம்மை பொறியில் சிக்க வைக்கும் ஐந்து பொறிகள் என்பதால், அவற்றை ’பொறிவாயில்’ என்றும், அவற்றை வெல்வதற்கு ஐந்துபுலன்களையும் வென்ற இறைவனின் அருள் நமக்கு வேண்டும் என்பதையும் நாம் அறிந்திடல் வேண்டும்.

இவை வெல்வதற்கு எளியவை அல்ல. மிக மிகக் கடுமையான ஒரு போராட்டம் என்பதாலேயே, திருமூலர்,

ஆக மதத்தன ஐந்துகளிறுள
ஆகமதத்தறி யோடணை கின்றில
பாகனு மெய்த்தவை தாமு மிளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறியோமே” (திருமந்திரம்-2023)

இதன் பொருள் என்னவெனக் கண்டோமெனில்,

மிகுந்த மதம் பொருந்திய ஐந்து இந்திரியங்கள் ஆகிய யானைகள் உள்ளன. அவை அனைத்தும் உடலில் களிப்பினை நல்கிடும் சந்திர மண்டலமாகிய கட்டுத் தறியில் பொருந்துவதில்லை. இவற்றை அடக்க முயலும் ஆன்மாவாகிய பாகனும் இளத்து, ஐம்பொறிகளின் வல்லமையும் குறைந்த பிறகு யோக நெறியால் திருந்துதல் என்பதை என்பதை நாம் அறியவில்லை. எனவே இந்திரியங்கள் செம்மையாய் இருக்கும்போதே யோகம் செய்தல் வேண்டும். இளைத்த பின் யோகத்தினால் பயன் இல்லை.

திருஞான சம்பந்தரின் தேவாரத்தில் நாம்,

“தொண்டன் அஞ்சு களிறும் அடக்கி”

என ஐம்புலன்களை ஐந்து யானைகட்கு ஒப்பிட்டு இருப்பதைக் காணலாம்.


ஆன்மா, இறைவனைச் சார்ந்து, ஐம்புலன் ஒடுக்கத்தினால், தன்னை மறந்த நிலையினை அடைவது நின்மலாவத்தை எனப்படும். ஐம்பொறிகள் ஆகிய யானைகளை அடக்கி, அறிவாகிய ஞானத்திரியியினத் தூண்டி, காணும் சீவ ஒளியிற் புகுந்து, ஊனாலாகிய உடம்பை சோதி வடிவில் காண்பவர்க்கு, சிவலோகம் செல்லும் வழி எளிதாகும் எனக் கூற வந்த திருமூலர்,

ஆனகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞாத்திரியைக் கொளுவி அதனுட்புக்
கூனை இருளற நோக்கும் ஒருவற்கு
வான கமேற வழியெளி தாமே. (திருமந்திரம் -2316)

புலனடக்கத்தினால் சீவ ஒளியில் நிலை பெற்று, தம்முடலை சோதிமயமாக காண்பவர் எளிதில் முத்தி அடைவர் என்றார்.

மேற்சொன்ன கருத்துக்களை எல்லாம், ஒரே குறளில் கூறவந்த திருவள்ளுவர்,

”உரனென்னுந்த் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.” (திருக்குறள்-24.

எனும் இக்குறட்பாவுக்கான கலைஞர் மற்றும் பரிமேலழகர் உரைகள் முறையே யாதெனக் கண்டோமெனில்,

”ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன்
கொண்டவனையே உலகம் போற்றும்” என மிக எளிதாகக் கூறுவார் கலைஞர்.
பரிமேலழகரோவெனில்,”உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக்
காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

இந்த ஐம்புலன்கள் தரும் ஐந்து பயன்கள் வகை தெரிந்து அவற்றை அடக்கி ஆள்பவர்க்கெ இவ்வுலகம் வாழ்வதற்கு எளிதானது எனக் கூற வந்த வள்ளுவர்,

“சுவையொளி யூறோசை நாற்றமென்றைந்தின்
வகை தெரிவான் கட்டே யுலகு” (திருக்குறள்-27)

இதற்கு உரை கூற வந்த பரிமேலழகர்,

“சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.)
இக்கருத்தினை தமக்கே உரிய எளிய நடையில் உரை கூறும் கலைஞரோவெனில்,

“ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன்
கொண்டவனையே உலகம் போற்றும்”

இந்த சுவையொளியூறோசை எனும் பதத்தை அப்படியே கையாளும் திருமூலர்,

”ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத் துள்ளறி வனவள்
ஆமே சுவையொளி யூறோசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுளு மாமே” (திருமந்திரம் -1350)

சதாசிவ மூர்த்திக்கு அனுக்கிரகச் சக்தியாக விளங்குபவள் இவளே.
இவளே கீழ் நோக்கிய சக்தியாக உயிர்களைச் செலுத்துபவள் . இவள் சுவை ஒளி ஊறு ஓசையாகிய இவற்றை அறியும் அறிவாகத் துணை செய்பவள். இவளே அருவ நிலையில் எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டவள் ஆவாள்என்பதன் மூலம், சதாசிவ நாயகியாகிய இச்சத்தியே சீவன்களுக்கு ஆற்றலையும் அறிவையும் அருளுபவள் ஆவாள் என ஐம்புலன்களின் மேன்மையையும் உணர்த்துகின்றார்.

எழுதியவர் : தா.ஜோ .ஜுலியஸ் (21-Sep-16, 3:38 pm)
பார்வை : 900

சிறந்த கட்டுரைகள்

மேலே