நன்மொழி மேல்வைப்பு - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

சென்னையைச் சேர்ந்த திருமதி.சியாமளா இராஜசேகர் ’கவிச்சுடர்’ பட்டம் பெற்றவர். ’எழுத்து’ வலைத்தளத்தில் நிறைய புதுக்கவிதைகளும், மரபுக் கவிதைகளும் பதிவு செய்து வருகிறார். அவற்றில் ’குறட்பாக்கள் – முருகன்’ என்ற படைப்பில் ஆறுபடை வீடு முருகனைப்பற்றி, குறட்பாக்களை இயற்றியிருக்கிறார். அக்குறட்பாக்களைக் கீழே அமைத்து மேலே இரண்டடிகளில் வெவ்வேறு கருத்துகளை வைத்து நேரிசை வெண்பாக்களாக நான் செய்த வெண்பாக்களைப் பதிவு செய்கிறேன்.

தக்கவொரு வேலையின்றி தாங்கவும் யாருமின்றி
எக்கணமும் சோம்பிடாதே; ஏனப்பா - பக்கப்
பரங்குன்றில் வாழும் பரமனின் மைந்தன்
வரந்தருவான் நம்பிக்கை வை. 1

அங்கிங்கென் றேதான் அலைந்து முயற்சியின்றி
பங்கமேதும் செய்திடாதே; பாரினில் - தங்க
அலையாடும் செந்தூரின் ஆண்டவன்தாள் பற்றத்
தொலைந்தோடும் துக்கமும் தோற்று. 2

மதுபானம் விட்டுவிடு; மங்கையரும் வேண்டாம்;
கதியெனவே வந்தமனை யாளை - மதித்து
பழனிமலை யேறிவரும் பக்தரைக் கண்டால்
அழகாய் மலர்வான் அகம். 3

துன்பம் வருங்காலுந் தூயவனே எந்நாளும்
வன்முறையில் தோயாது நல்லதையே - நன்னிடுவாய்;
ஏரகத் தேவனும் ஏற்ற மருளிடுவான்
சீரகத் தோடவனைத் தேடு. 4

கஞ்சா, கொலைகொள்ளை தீய பழக்கங்கள்
வஞ்சனைகள் நீக்கிவிட்டு வல்லமை - நெஞ்சில்
சினமும் தவிர்த்தால் திருத்தணி வேலன்
மனக்கவலை தீர்ப்பான் மகிழ்ந்து. 5

பந்தபாசம் உள்ளோர்க்கு பாசமுடன் ஊணளித்து
எந்நாளும் சொந்தமெனக் காப்பவனை - வந்திருந்து
சோலை மலையழகன் சூழும் வினையறுப்பான்
வேலை வணங்கிநிதம் வேண்டு. 6

நன்றி: சியாமளா ராஜசேகர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Sep-16, 8:44 am)
பார்வை : 69

மேலே