ஒரே கூட்டம்
ஒரே கூட்டம்
***************
இப்ப என்னை சுத்தி
ஒரு கூட்டமே இருக்கு...
எங்க ஊர்
சின்ன கிராமம்...
எப்படி கூட்டி பார்த்தாலும்
இருபதிலிருந்து முப்பது குடும்பம்தான்
இருக்கும்...
எதுத்த வீட்டுல இருக்குறார்
எனக்கு சித்தப்பா....
அவர் எங்கப்பாவ 'அண்ணே'ன்னு
கூப்புடுவதால்...
அடுத்த வீட்டில் இருப்பவர்
எனக்கு மாமா..
அவர் எங்கம்மாவ
'தங்கச்சி'ன்னு சொல்வதால்...
சந்தோஷமான வாழ்க்கை...
பசிச்சா சோறு போட
அம்மா தேவையில்ல...
யார் வீட்டுல வேணும்னாலும்
சாப்புடலாம்....
தப்பு செஞ்சா
அப்பா திட்டணும்னு அவசியமில்ல..
உரிமையில எல்லோரும் திட்டலாம்...
சாயங்காலம்
வீட்டு முற்றத்தில் உக்காந்து
கூடி பேசுவோம்....
எங்க மாமா என்னைத்தான்
அதிகமா கலாய்ப்பார்...
"என் பொண்ண
கட்டிக்கிறியாலே"ன்னு..
எங்கம்மா சொல்லும்..
"எம்மவன கட்டிக்கணும்னா
பிளசர் காரு வேணும்"னு..
"எம் மருமகனுக்கு இல்லாததா"ன்னு
அவரும் சொல்ல...
கூட்டத்தில்
மூக்கு சளி வடிய
கை சூம்பிக்கிட்டே நிப்பா
மாமன் மகள்...
எனக்கு அவ
அவளுக்கு நான்னு
கேலி கிண்டலுமா வளர்ந்தோம்...
வயசு வந்ததும்
உரிமையில் காதலிச்சோம்...
என்ன விட நல்லா படிச்சவ
அவ...
உரிமைல
பொண்ணு கேட்டேன்..
பொண்ணு தரல..
ஊரவிட்டு ஓடிப்போலாம்னு முடிவெடுத்து
பக்கத்து ஊர தாண்டல..
சின்னதா ஒரு வெட்டு..
அது எங்க சித்தப்பா....
"என்னதா இருந்தாலும்
வேற சாதிக்கார பயதானல நீ..."
அது என் மாமன்..
இப்ப என்னை சுத்தி
ஒரு கூட்டமே இருக்கு..
எழுந்து பேசத்தான் நான் இல்ல...
"பிறகு என்ன 'இதுக்கு'ல
மாமன் மச்சான்னு பழகுறீங்க
கிராமத்துல..."
இவண்
✒க.முரளி (spark MRL K)