நட்பு

நட்பொன்றே இறுதிவரை நல்லதுணை வாழ்வினிலே
வாழ்வினிலே வரும்துயரை விரட்டிவிட உடனிருக்கும்
உடனிருக்கும் தோழன்தான் உயிர்காப்பான் துன்பத்தில்
துன்பத்தில் துடுப்பெனவே கரைசேர உதவிடுவான் !
உதவிடுவான் உள்ளமதைத் தேற்றிடுவான் உயிர்நண்பன்
உயிர்நண்பன் அமைவதெல்லாம் ஆண்டவனின் வரமாகும்
வரமான தோழனுக்கு வருத்தமென அறிந்துவிடில்
அறிந்துவிட்ட அக்கணமே இவன்செல்வான் ஆறுதலாய் !
ஆறுதலாய் நட்பிருக்க ஆபத்தும் பறந்துவிடும்
பறந்துவிடும் துன்பத்தால் இன்பநிலை கூடிவரும்
கூடிவரும் சொந்தங்கள் உடன்வருமோ கடைசிவரை
கடைசிவரை நட்பேதான் துணையாகும் நிழல்போல !
நிழல்போலத் தொடர்ந்துவரும் வல்வினையும் தோற்றோடும்
தோற்றோடக் கடவுளிடம் நண்பனுக்காய் மன்றாடும்
மன்றாடும் நண்பன்தான் வாழ்வினிலே ஒளிவிளக்கு
ஒளிவிளக்கின் வெளிச்சத்தில் இருள்நீங்கும் இதயத்தில் !
இதயத்தில் அன்புடனே மகிழ்ச்சியுடன் பழகிடுவான்
பழகிடுவான் என்றாலும் தப்பென்றால் சுட்டிடுவான்
சுட்டிடுவான் குறைகண்டு தலைகுட்டி இடித்துரைப்பான்
இடித்துரைத்துப் பசும்பொன்னாய் மாற்றிவிடும் நட்பொன்றே...!!!