ஆத்மாவின் அலறல்

யார் இந்த மனிதன்?

விடிந்தும் விழியாமல்
உறக்கம் கலையாமல்
நித்திரை மயக்கத்தில்...

ஏய் மனிதா!

வெண்மதி உன்னிடம்
விடைபெறத் துடிக்குது
விழிகள் திறந்துபார்!

வேலைக்கு நேரமாச்சு
காலைச்சூரியன் - கோபக்
கனலைக் கக்குகிறான்
கண்கள் திறந்துபார்!

தேநீரின் ஆவி பிரிந்து - உன்
நாசித் துவாரம் புகப் பார்க்கிறது
ஆவி பிரிந்த கூடு போலெ - இன்னும்
ஆழமான தூக்கமென்ன ?
ஆவி போன தேநீரும் - கோப்பையில்
ஆறிப் போன ஜடமாயிற்று...

நாடே உனக்காக
நாளேடில் காத்திருக்கு
நாளே விடிந்தபின்னும்
தீராத துயிலுமென்ன?

இடியென இடித்தும்
இமியும் இளகா
இடியமீன் குணமோ
உன் தூக்கம்!

அடி மேல் அடி சேர்த்து
அதிகாலை வேளையிலே
அடியேனின் சுப்ரபாதம்
அடையவில்லையா..?
உன் செவிகளின்வாசலை..!

இத்துனை உரைத்தும்
நித்திரை கலைக்க மறுக்கிறாய்..
பித்தனே!
சித்திரை அனலாய் கொதிக்கிறேன்..!
இதோ வருகிறேன் உன்னை எழுப்ப....

ஆ!! யார் இவனுக்கு என் முகம் கொடுத்தது?
ஒருவேளை..

இது நான்தானோ?
நானேதானோ? - எழுப்புவது
வீண் தானோ? - உயிர் பிரிந்து
இறந்தேதான் போனேனோ?

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (26-Sep-16, 3:01 pm)
Tanglish : aathmaavin alaral
பார்வை : 95

சிறந்த கவிதைகள்

மேலே