மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தும் “கண்ணதாசனின் சிலப்பதிகார கவிதை”

மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தும் “கண்ணதாசனின் சிலப்பதிகார கவிதை”
.

மனிதனின் மனதில் உருவாகின்ற நிகழ்வினை உளவியல் அடிப்படையில் சங்க காலத்திலேயே தொல்காப்பியர் அறிந்து வைத்திருக்கிறார். ஆகையால் தான் மனதில் உருவாகின்ற அனைத்தையும் உடல் வழியாக வெளிப்படுத்துகின்ற மெய்ப்பாடுகளாகக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகையான மெய்ப்பாடும் கவிதையின் ஆணிவேராக இருக்கிறது. அவ்வாறாக உருவாகின்ற மெய்ப்பாடுகள் உணர்ச்சிகளாக வெளிப்படுகிறது. மெய்ப்பாடுகள் கவிதைக்கு பெருமளவு முக்கியத்துவம் உரியதாய் அமைகிறது. தொல்காப்பியர் இதனை குறிப்பிடும் போது,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப ”….. (தொல்: 247) என்கிறார்.

நகை முதலாக உவகை முடிவாகச் சொல்லப்படும் மெய்ப்பாடுகள் அனைத்தும் “இரசம், சுவை” போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. கண்ணதாசனின் சிலப்பதிகார கவிதை”-யில் உணர்ச்சி வெளிப்பாடாம் மெய்ப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கண்ணதாசன்
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

நகை
நகை என்பது சிரிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி, இளிப்பு போன்ற பல பொருளை உணர்த்தும். பெரும்பாலும் நகைச்சுவையான உணர்வை உணர்த்துவதாகவே இச்சொல் அமையும். இப்படிப்பட்ட நகை உணர்வை கவிஞர் கண்ணதாசன் தம் கவிதையில் கூறும் போது,

“மாலையிட்ட கணவனோடு காவிரிப்பூம் பட்டினத்தில்
மணமிகுந்து வாழ்ந்திருந்த நாளிலே….” (கண் பா: 457- பக்.362)
என்று பாடுகிறார். அதாவது கண்ணகி தன் கணவனுடன் இன்பமாக வாழ்திருத்தலை பார்க்கும் போது மகிழ்ச்சி தோன்றுவதோடு மனதில் மலர்ச்சி ஏற்படுகிறது.

அழுகை
அழுகை என்பது அழுதல் என்கிற பொருளில் வரும். அதுமட்டுமின்றி அவலச்சுவையைக் குறிப்பதாகவும் வருகிறது. அப்படிப்பட்ட அவலச்சுவை தானே அவலங்கொள்ளுதலும் பிறர் அவலங்கண்டு அவலங்கொள்ளுதலும் என இரு வகைப்படும். கண்ணதாசன் கண்ணகி கவிதையில் அவலங்கண்டு துன்பப்படுவதைக் கூறும் போது,
“ - கொடி
மாதவியாள் ஆடவந்தாள் ஊரிலே! – பொன்
மாலை கொண்ட மணவாளன்
மாதவியை பின் தொடர்ந்தும்…….” (கண் பா: 457 – பக். 362)
என்ற வரிகளால் கண்ணகியின் அவல நிலையை எடுத்துரைக்கிறார்.

இளிவரல்
இளிவரல் என்பது இளிவு, இளிப்புச்சுவையை உணர்த்துகின்ற பொருளில் வரும்.
“வானகமே வையகமே சொல்வீர்
என் கணவன் கள்வனோ?
செங்கதிர் செல்வனே நீ சொல்
என் கணவன் கள்வனோ?
கள்வனோ? என் கணவன் கள்வனோ?.”... (கண் பா: 457 – பக். 363)

என்னும் வரிகளால் கண்ணகியின் இழிநிலையை நினைத்துப் பார்த்து கண்ணதாசன் பாடியுள்ளார்.

மருட்கை
மருட்கை என்பது வியப்பு, மயக்கம், திகைப்பு எனும் பொருளினை குறிப்பதாய் வரும். வியப்பும் அற்புதமும் சேர்ந்த கலவையென்றும் கூறப்படும்.
“வேதனைக் கணவன் வீடு திரும்பியும்
வெருத்ததில்லை நீயே! – மணி
நாதம் ஒலித்திடும் பாத சிலம்பினை
கொள்கென கொடுத்தா! .....” (கண் பா: 457 - பக். 362)

வெளித்தோற்றத்தில் நல்லவன் போலவும் உள்ளே தீய எண்ணங்களையும் கொண்டிருந்த கோவலனை வியப்போடும் திகைப்போடும் கண்ணகி வரவேற்று உபசரிப்பது மருட்கை தருவதாக கவிஞர் கூறுகின்றார்.

அச்சம்
பிறரால் அச்சம் பிறக்கும் என்ற வழிப் பின்வரும் பாடலில் அச்சம் மெய்ப்பாடு வெளிப்படுவதைக் காணலாம்.
“மாயக் கொல்லனின் சதியால்
கோவலன் மாண்டதை அறிந்தாயே – எங்கள்
தூயவளே நீ புலியென சீறி
துள்ளி எழுந்தாயே! …” (கண் பா: 457 - பக். 363)

கண்ணகியின் வாழ்க்கைப் பயணம் மிகுந்த பயம் நிறைந்த வழியிலேயே போய்க்கொண்டிருப்பதை விளக்குகிறார்.

பெருமிதம்
பெருமிதம் என்பது செருக்கு(வீரம்)> மேம்பாடு> களிப்பு எனும் பொருளில் வரும். மனிதனின் உள்ளத்தில் வெளியாகும் உணர்வுப்பூர்வமான பண்பு. கவிஞர் கண்ணதாசன் கண்ணகியின் பண்பினைக் கண்டு பெருமிதம் கொள்ளும் வகையில்,
“பாவலர்க்குக் கவியான
கண்ணகியம்மா – தமிழ்
பாமரர்க்குப் பெருமைதந்த
கண்ணகியம்மா!” (கண் பா: 457 - பக். 362)
என்று சிறப்பித்துக் கூறுகின்றார்.

வெகுளி
வெகுளி என்பது சினம், வெறுப்பு, உருத்திரம் என்கிற பொருளைக் குறிப்பதாய் அமையும். கண்ணதாசன் கண்ணகி மதுரையை கோபத்துடன் சாபமிடும் உணர்ச்சியை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.
“எட்டுத் திசை கொட்டிக் குமிறிட
சடசட சடவெனத் தெருவிலே
கொற்றக் குடை சுற்றம் பதறிட
படபட படவெந் தணலிலே
பட்டுப்பல செத்துக் கருகிட
பத்தினியே உன் விழியிலே….”(கண் பா: 457 - பக்.362- 363)

உவகை
உவகை என்பதற்கு மகிழச்சி, அன்பு, காமம், காதல் என்கிற பல்வேறு பொருளில் அமையும். பெரும்பாலும் மகிழ்ச்சி என்னும் பொருளில் எல்லோரும் குறிப்பிடுவர். உவகைப் பற்றி கவிஞர் குறிப்பிடுகையில்,
“எங்கள் குல நாயகியே
கண்ணகியம்மா – நல்ல
இன்னமுதாய் வந்துதித்தாய்
கண்ணகியம்மா!
தங்க தமிழ் நாட்டினிலே
கண்ணகியம்மா – கற்புத்
தாயாக வந்துதித்தாய்
கண்ணகியம்மா!... ” (கண் பா: 457 - பக். 361)
என கண்ணகியினால் தம்முள் உண்டான மகிழ்ச்சியை வெளிப்படையாக உணர்த்துகிறார்.

முடிவாக, மெய்ப்பாடுகள் வழி கவிஞர் தம்முடைய ஒவ்வொரு கவிதையிலும் மனிதனின் உணர்வுகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளதை கவிஞருடைய கவிதைகளின் வழியாகப் அறிய முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு மனிதனின் உணர்ச்சி வெளிப்பாட்டையும் புரிந்து கொள்ள முடிகிறது. கற்போர்க்கும் கேட்போர்க்கும் இவ்வுணர்ச்சிகள் பொங்குமாறு மாற்றத்தை ஏற்படுத்துவது கவிதையின்கண் அமையும் உணர்ச்சியாகும்.

எழுதியவர் : ஆ.ஷைலா ஹெலின் (28-Sep-16, 10:21 am)
பார்வை : 1667

மேலே