மீண்டும் பூத்த காதல்

சூரியன் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் பொழுது பல்லவி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் வெள்ளைநிற உடல் சூரிய ஒளியில் தங்கநிறத்தில் மின்னியது. கண்ணத்திலிருந்த பருக்கள் கூட பவளமாய் ஜொலித்தது.அவளின் அழகை ஜன்னல் வழியே குயில்களும் அவள் வளர்த்த புறாக்களும் போட்டி போட்டு ரசித்துக் கொண்டிருந்தன.அப்போது அவளின் செல்பேசி கத்தியது.
சின்ன விசும்பலுக்குப் பின் கண் விழித்தாள்.அழகாய் கலைந்திருந்த கூந்தலை மெதுவாக கோதினாள்.பின் கண்களை கசக்கிக் கொண்டே கட்டிலைவிட்டு இறங்கினாள். அவளின் கைபேசி மீண்டும் கத்தியது.அதனை எடுத்துப் பார்த்தாள்.அதில் அவளின் கணவனின் போட்டோ இருந்தது. மேலும் இன்று அவள் கணவனின் நினைவு தினம் என்பதையும் நினைவூட்டியது.

அவசரமாக கிளம்பி தன் கணவனின் கல்லறைக்குச் சென்றாள்.அங்கு ஜோசப் என பெயரிடப்பட்ட கல்லறைக்கு முன் சென்று அதனருகில் அமர்ந்தாள்.கண்ணங்களை கண்ணீர் நனைத்துக் கொண்டிருந்தது.லேசாக வீசிய தென்றல் அவள்மீது உரசிச் சென்றது.அது அவள் கணவன் ஜோசப் தீண்டியதைப் போன்ற உணர்வு அவளுக்கு. கஷ்டபட்டு கண்ணீரை நிறுத்தினாள். அவள் உதடுகள் புன்னகை புரிந்தன.அப்போது ஒரு மலர் அவள் மீது வந்து விழுந்தது. அதனை தன் கணவனே தனக்கு கொடுத்ததைப் போல எண்ணி மகிழ்ந்தாள்.பின் அந்த இடத்தை விட்டு கிளம்பினாள். நேராக வேலை செய்யும் இடத்திற்குச் சென்றாள்.அங்கு அவள் வருகைக்காக காத்திருந்த மணிகண்டன் அவள் வந்ததும் அவள் முன் சென்று நின்றான்.

அவனைப் பார்த்து எரிச்சல் அடைந்தாள்.அவனை கேவலப் படுத்திவிட்டு சென்றாள்.மணி விடாப்படியாக அவள் பின் சென்று பேசத் தொடங்கினான்.

"பல்லவி கொஞ்சம் வெயிட் பன்னு ப்ளீஸ் " உன்கிட்ட பேசணும்.

"ஐயோ மணி என்னைய கொஞ்ச நேரம் தனியா இருக்க விடு.ப்ளீஸ்"

ஏய் பல்லவி இன்னும் எத்தனை நாள் ஜோசப்பையே நினைச்சுகிட்டு இருப்ப. நானும் 4 வருஷமா உன்னோட பதிலுக்காக காத்திருக்கேன். ஆனா நீ என்னடான்னா என்னை வெறுத்து ஒதுக்குற? என கெஞ்சும் விதமாக கேட்டான்.

அதற்கு பதிலாக பல்லவியால் கண்ணீரை மட்டுமே தர முடிந்தது.காதலித்து திருமணம் செய்த சில மாதங்களிலேயே தன் கணவனை இழந்து வாழ்ந்து வருகிறாள்.கணவன் இறந்து 4 வருடங்களாகியும் அவன் நினைப்பிலே காலம் கடத்துகிறாள். மணிகண்டன் அவளைப் பார்த்ததிலிருந்து அவள் மீது அன்பும் அக்கறையும் காட்டி வருகிறான்.அவன் ஜோசப்பை விட அதிகமாக அக்கறை காட்டுகிறான் என அவளுக்கே தெரியும். இருந்தும் அவனை ஏற்க தயங்குகிறாள்.

நேரம் கரைந்தது.சூரியன் தூங்க தயாராகிக் கொண்டிருந்தது. வேலை முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். எதிர் பாரா விதமாக மழை பெய்யத் தொடங்கியது.

பல்லவிக்கு மழையில் நனைவது மிகவும் பிடிக்கும். உடனே மழைகண்ட மயிலாய் தோகையை விரித்து மழைக்குள் சென்று நனைந்தாள்.அவளின் அங்கங்கள் முழுதும் மழைநீர் நனைத்தது.காய்ந்து கிடந்த அவளின் மனதையும் சேர்த்து நனைத்தது.

அவளின் மனதில் எவ்லையிலா சந்தோஷம் பெருக்கெடுத்து ஓடியது.தன்னை மறந்து ஏதேதோ செய்தாள். அவள் மனதில் "தான் காதலித்தவனின் நினைப்பு குறைந்து,தன்னை காதலிப்பவனின் நினைப்பு கூடியது"
இப்படி நினைப்பது அவளின் குற்றமள்ள என்பதை புரிந்து கொள்ளத் தெரியாமல் வேதனை அடைந்தாள். பல நினைப்புகளை கடந்து நினைவிற்கு வருவதற்குள் மழை நின்றது. பல்லவி எதையோ பறி கொடுத்ததை போல கவலை அடைந்தாள்.

ஈரத்துடன் வீட்டிற்கு சென்றாள். குழப்பமும் கவலையும் அவளை மாய்த்துக் கொண்டிருந்தன.
மீண்டும் அவள் மனதில் பூத்த காதலை ஏற்றுக்கொள்ள தெரியாமல் துன்பப் பட்டுக் கொண்டிருந்தாள். விடையிலா கேள்வி போல அவளின் மனம் மயங்கி கிடக்கிறது.

எழுதியவர் : சங்கேஷ் (28-Sep-16, 7:49 pm)
சேர்த்தது : சங்கேஷ்
பார்வை : 620

மேலே