யாதுமாகி நின்றாய்

#யாதுமாகி நின்றாய்..!
ஈரைந்து மாதங்கள் இடைதாங்கி என்னை
உயிருக்குள் உயிரென்றே காத்தாள் என் அன்னை
உதிரமும் பாலாக்கி ஊட்டினாள் - தாயும்
தெய்வம்தான் நான் பணிவேன் அவள்தாள்..! (18)
கண் துஞ்சாமலே தான் என்னை காப்பாள்
செவிலியாகவே மாறி பிணி தீர்ப்பாள்
இரவென்றும் பகலென்றும் இல்லை - தாயின்
சேவை எக்காலமும் காண்பான் இப்பிள்ளை (35)
பள்ளி செல்கையில் குருவானாள் - நித்தம்
பாடம் பகன்றுமே ஞானம் வளர்த்தாள்
வாழ்வினில் ஏற்றிடும் ஏணி - நானும்
கரை சேர்ந்திட ஆகினாள் நல் தோணி (52)
புத்திமதி சொல்லும் போதிலே
அவள் போதி மரமென்றே ஆகினாள்
துயர் வந்து சோர்ந்திடும் நேரம் - வேதனை
தீர்த்திடும் தோழனும் அவளானாள்..!
யாதும் யாதுமாகி நின்றனள் தாயும் - தெய்வம்
என்றே தொழுவேன் அவளை நாளும்..!(76)