அவளே எங்கள் தேவதை
மண்ணில் உதித்த அழகுநிலா
****மறைந்து பார்க்கும் இனியபலா !
கண்ணில் குறும்பு கொப்பளிக்க
****காந்தச் சிரிப்பால் உளம்கவர்வாள் !
வண்ண மயிலாய் அவளாட
****வருத்த மெல்லாம் மறைந்துவிடும் !
விண்ணின் மீனாய் விழிசிமிட்டி
****வீட்டை ஒளிரச் செய்திடுவாள் !
சின்னக் காதில் தோடாட
****சிவப்புச் சட்டை சேர்ந்தாட
பின்னல் சடையும் தோளாட
****பின்னால் இலைகள் காற்றாட
தென்றல் தழுவித் தாலாட்ட
****தேகம் தொட்டுப் பாராட்ட
பொன்னாய் மிளிரும் வெண்மதியாய்
****பூத்தாள் எங்கள் தேவதையே !