ஒன்றுமில்லை கவிதை

குளிர்க் காற்றின் மென்மையில்
காலை நடைபயிற்சியில் இருக்கும்போது
எதிரே வந்த நெருங்கிய நண்பர்
என்னிடம் பேச்சுக் கொடுத்து
நலம் விசாரித்தார் கவனமாய்
பரிமாற்றலுக்குப் பிறகு
மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.
ஓன்றுமில்லை என்றார்
ஒன்றுமில்லை என்று சொன்னவர்
அரைமணி நேரம் தன் சோகச்
சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.
ஒன்றுமில்லை என்பதில் தான்
எத்தனை உருவகங்கள் அவர்
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.
வெங்காயத்தின்
உள்ளே ஒன்றுமில்லை தான்
அதன் மேலே அடர்த்தியாக
அடுக்கியிருக்கிறது ஒவ்வொன்றாகக்
காய்ந்த சருகுகள்.
ந.க.துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (29-Sep-16, 6:35 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : onrumillai kavithai
பார்வை : 480

மேலே