புறப்பட்டாள் புயலெனவே

மன்னவனைக் கொன்றவனை மண்ணைவிட்டே அனுப்பிவிட
மன்றத்தில் சூளுரைத்து மங்களமாய்ப் பொட்டுமிட்டு
மின்னலுடன் இடிமுழங்க மெல்லிடையாள் கோபமுடன்
புன்னகையை மறந்தவளாய்ப் புயலெனவே புறப்பட்டாள் !

காற்றினையே கிழித்தவளும் கண்சிவக்க நிற்கின்றாள்
காற்சிலம்பின் சத்தத்தில் காலனையே நடுங்கவைத்தாள்
சீற்றமுடன் வெகுண்டெழுந்து தீக்கனலைக் கொப்பளிப்பாள்
தோற்றாலும் இறுதிவரை துணிவுடனே எதிர்த்திடுவாள் !

வீரமுடன் பொங்கினளே ! வேலெடுத்துப் போராட
தீரமுடன் கிளம்பினளே ! தீமைகளைப் பூண்டோடு
வேரறுத்து வந்திடுவாள் ! வெற்றியினைச் சூடிடுவாள் !
வீரமகள் அதன்பின்னே விரிகூந்தல் முடிவாளே....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Sep-16, 6:14 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 73

மேலே