உள்ளமதில் ஊனம்
உடலிலே ஊனம் இருந்தால்
வழிகளும் உண்டு வாழ்ந்திட !
மாற்றம் செய்திட வசதிகளுண்டு
மறுவாழ்வு பெற்றிட வழியுமுண்டு !
உள்ளத்தில் ஊனம் இருந்திட்டால்
பள்ளத்தில் விழுந்த நிலையாகும் !
எண்ணமும் சிதறி சிதலமடைந்து
வாழ்வும் இருண்ட நிலையாகும் !
வலுவான உள்ளமே வழிகாட்டும்
வாழ்வின் பாதைக்கு வெளிச்சமிடும்
வெறுமை என்பதே தோன்றாது
வெற்றியும் நம்மைத் தேடிவரும் !
ஊனமுள்ள உடலானாலும் நினையாது
ஊன்றியக் குறிக்கோளால் வென்றவர்
உலகமே பாராட்டுது மாரியப்பனை
வாரியும் வழங்குது பரிசுக்குவியலை !
உள்ளமதில் ஊனம் பிறந்திட்டால்
கள்ளங்கள் மனதில் தோன்றிடும்
தவறான பாதையில் சென்றிடும்
தடம்மாறிய வாழ்வும் தடுமாறும் !
ஊனமடையா உள்ளம் நிலைக்கட்டும்
நிலைத்திட்ட உள்ளங்கள் வாழட்டும்
வாழ்ந்திடும் நெஞ்சங்கள் மகிழட்டும்
மகிழ்ந்திடும் நிலையே நிலவட்டும் !
ஊனமென்ற வார்த்தையே மறையட்டும்
உள்ளங்கள் உற்சாகத்தில் மிதக்கட்டும் !
பழனி குமார்

