சும்மா படிங்க 3

சும்மா படிங்க 3
உங்களை கடந்து செல்பவள்

ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு கடந்தகாலம் உண்டு

சிலர் உடல் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கலாம்
சிலர் பெற்றோர்களாலேயே கொடுமைப்படுத்த பட்டிருக்கலாம்

சிலர் பருவமெய்தியதில் பாதிக்கப்பட்டிருக்கலாம்
சிலருக்கு குழந்தை பருவத்தில் தங்கள் குடும்பத்தினர் மூலமே
பாலியல் வன்முறை நிகழ்ந்திருக்கலாம்

சிலரது காதல் பயணம் தடம்புரண்டு போயிருக்கலாம்
சிலர் காதல் என்ற பெயரில் காமத்திற்கு கட்டாயப்படுத்த பட்டிருக்கலாம்

சிலர் பாலியல் வன்முறைக்கு பலியாகியிருக்கலாம்
சிலரது அந்தரங்கம் படம்பிடித்து பகிரப்பட்டிருக்கலாம்

சிலர் முன்னாள் காதலர்களால் மிரட்டப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கலாம்
சிலர் முறையற்ற உறவில் சிக்கியிருந்திருக்கலாம்

சிலர் மாதவிடாய் பிரச்சினைககளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்
சிலருக்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கலாம்

சிலர் குடும்பத்திலிருந்து பிரிந்து வந்திருக்கலாம்
சிலர் விவாகரத்து பெற்றவர்களாக இருக்கலாம்

சிலருக்கு பொருளாதார பிரச்சினைகள் இருக்கலாம்
சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்திருக்கலாம்

சிலர் தற்கொலைக்கு முயன்று தோற்றிருக்கலாம்

உங்களை கடந்து செல்பவள் மேற்கண்ட ஏதாவது ஒன்றை கடந்து வந்திருக்கலாம்.

ஆனால் அவள் ஏற்கனவே தன் கண்ணீரை துடைத்து, கூந்தலை சேர்த்து முடிந்து,
இனிமையான புன்னகையை முகமூடியாய் அணிந்து. திடமாக நிமிர்ந்து நின்று,
எதிர்காலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

ஏனெனில் அவள் இன்னும் சிறிதளவு நம்பிக்கையை மனதில் சுமந்துகொண்டிருக்கிறாள்.
உண்மையான அன்பு உலகத்தில் உள்ளது என்பதில் அவள் நம்பிக்கை இழந்துவிடவில்லை.

அவளது கடந்தகாலத்திற்காக அவளை நசுக்கி விடாதீர்கள்.
மேலும் அவமானங்களால் அவள் முகத்தில் அறையாதீர்கள்.
அவளுக்க தடைகளை ஏற்படுத்தாதீர்கள்.

அவளுக்கு வழிவிட்டு நகர்ந்து நில்லுங்கள்.
முடிந்தால் அவளது கரங்களை பிடித்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
அவளது ஆன்மா எவ்வளவு இனிமையானது,
அவளது நம்பிக்கை எவ்வளவு வலிமையானது என்பது உங்களுக்கு புரியும்.

அனைத்து ஆற்றலும் உறிஞ்சி எடுக்கப்பட்ட பிறகும்
அவள் எவ்வாறு தன்னை முன்னெடுத்து செல்கிறாள் என்பதை கண்டு வியந்து போவீர்கள்.

அவள் பக்கத்து வீட்டு பெண்ணாகவோ அல்லது வேறோரு வீட்டு பெண்ணாகவோ இருக்க வேண்டுமென்பதில்லை.
அவள் உங்களது உயிர் தோழியாகவோ, உடன் பிறந்த சகோதரியாகவோ, உங்கள் மனைவியாகவோ, ஏன் உங்கள் தாயாக கூட இருக்கலாம்.

அவளது கடந்த காலத்தை வைத்து அவளை தீர்மானிக்காதீர்கள்.
அவளுக்கு தகுதியான, அமைதியான எதிர்காலம் என்ற பரிசை அவளுக்கு அளியுங்கள்.
தீர்மானத்தை மட்டுமே சொல்ல தெரிந்த இந்த உலகத்திற்கு எதிராக அவளுடன் கைகோர்த்து நில்லுங்கள்.

அவளுடன் உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எப்பொழுதும் அவள் எதிர்பார்த்து நிற்பது அதற்காக மட்டும்தான்.

#பெண்களை மதிப்போம்
#அன்பு காட்டுவோம்

(முகநூலிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது - sunflower sathishkumar)

எழுதியவர் : சூரியகாந்தி (30-Sep-16, 7:48 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 254

மேலே