ஏனமேந்தும் வாழ்வு
![](https://eluthu.com/images/loading.gif)
எழில்மிகு வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ?...
ஏக்கத்தில் தவிக்கின்றேன் ஏன் இந்நிலை வந்ததோ?...
எண்ணங்கள் ஓடும் எனக்குள் ஆயிரம் கேள்விகள்...
ஏனோ விடையில்லை ஏதும் அறியாதப் பிள்ளை......
எந்தப் பாவமும் எத்தவறும் நான்செய்ய வில்லை...
ஏறாத கோவில்கள் ஏறித்தான் இறங்குகிறேன் நாளும்...
என்னோடு ஒட்டிய என்னுயிர் பசியில் அழுதிட
ஏசுகிறேன் இறைவனை ஏழுமலையான் கேட்கவு மில்லையே......
என்னென்ன கனவுகள் என்னன்னைக் கண்டாளோ யாவுமே
ஏகராசி இருள்விழுங்கி ஏப்பம் விட்டுச் சென்றதே...
என்னை ஈன்றவளும் எனைச் சார்ந்தவரும் பிரிந்ததால்
ஏதுமற்று வீதிகளில் ஏந்தும் நிலை வந்ததே......
எத்தனை பூக்கள் எனைப்போன்று இவ்வுலகில் வாழுமோ?...
ஏனமேந்தி நித்தமும் ஏளனப் பார்வைகளால் சாகுமோ?...
எரிதழல் உள்ளத்தில் எரிந்திட எந்திரமாய் அலைகிறேன்...
ஏற்றம் பெறாதோ ஏழையின் இந்த வாழ்வு......
எழுதி வைத்த எவரும் விரும்பாத கவிதைகள்
ஏகாந்த வெள்ளத்தில் ஏழ்மையின் படகிலே பயணம்...
எதிர்திசைக் காற்றில் எங்ஙனம் கரையினைச் சேருவேன்...
ஏகரூபனே எங்களுக்கு ஏதாவது வழியொன்று செய்திடு......
அருஞ்சொற்பொருள் :
ஏகராசி - அமாவாசை
ஏகரூபன் - கடவுள்