நாம் வெகு ஜனம் - வெகுளி ஜனம் -சந்தோஷ்

மிக நீண்ட
உரை நிகழ்த்தியப் பிறகு
தண்ணீர் குடிக்கும் இதம் போலவே
இருக்கிறது தோழி....
என் மீதான உன் அன்பு....!

**
உனதான கர்வத்தையும் திமிரையும்
என் மீதான கோபத்தையும் கலைத்து விட்டு
நமதான நிர்வாணத்தை உடுத்தி விட்டு
மீண்டும் வா......ஆதி அன்பிற்கு..!
ஆதாம் ஏவாளுக்கு
காதலில் ஒரு சந்தேகமாம்...
தீர்த்து வைப்போம்.. வா...!
**


உன்னுடனான இருப்பை
நீ உறுதி செய் போதும்
நித்தம் நித்தம்
மிச்சம் தரும் முத்தங்கள் -உன்
மச்சங்கள் மீது நிச்சயமுண்டு
அன்பே...!
**

போர் வரலாமென சொல்கிறார்கள்.
நம் முதலிரவை விட
பெரிய போர் ஒன்று
இந்த உலகம் உண்டாக்குமா
சொல் அன்பே..!

**

காதலிக்க தெரியாது
காமம் தீர்க்க தெரியும்.
அதில்
காதல் தீர்த்தம் இனிக்கும்.
வெட்கப்படாதே அன்பே..!

**

நமக்கு பிறக்கும் குழந்தை
நமக்கு தரும் முத்தங்களின்
எச்சில் துளிகளில்
ஒரு பேரின்பச் சுவையில்
இந்த பிரபஞ்சத்தின்
சந்தோஷ தம்பதியாக
நாம் மிதப்போமே
அதை தவிர,
வேறெந்த உள்நோக்கமும் இல்லையடி.
நாம் நம்மை காதலிக்க..!

**
யார் உடலில் யார் தீ வைத்துக் கொண்டாலும்
யார் யாரோ நீதிக் கேட்டு வெம்பினாலும்..
யார் யாரை கொலைச் செய்தாலும்
யார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டாலும்
எந்த ஜாதி எந்த ஜாதியை கிழித்தாலும்
எந்த மதம் எந்த மதத்தை மிதித்தாலும்
நமக்கு என்ன அன்பே....?
நாம் வெகு ஜனம்..வெகுளி ஜனம்..!
அப்பாவி ஜனநாயக மிருகம்..!
குரைக்கிற நாய் கடிக்காது....
கொலையாகிற நீதியும் தான்..!
அங்கே பாரேன்...
நீதி தேவதை சட்டச் சேலையின்றி
நிர்வாணமாய்........!
வா.. நமக்கென்ன..!
கணக்கு தீர்ப்போம் வா..!
உன் இடது கன்னத்தில்
நான் கொடுக்க வேண்டிய
முத்தம் நூறு பாக்கியிருக்கு...!


**

--இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (1-Oct-16, 7:46 pm)
பார்வை : 81

மேலே