ஆக்கிரமிப்பு

மாதாந்திர வலியொன்றைச்
சுமக்கும் அடிவயிற்றில்
கலந்துவிட்டிருக்கும் உதிரமாய்
கழிவுபட்டிருக்கிறது
மன ஓட்டம்
அது சிடுசிடுவென
உண்ணத் துவங்குகிறது
சினக் குவியலுக்குள்
தொண்டையெடுத்ததாய்
தனிமைக்குத் தேவையற்ற
வெளிச்ச முகத்தைக் காட்டும்
தெருவிளக்கில்
மின்சாரமென அச்சுறுத்துகிறது
பின் தலை துவட்டிக் கொள்ளும்
அதன் ஈரநுனிகளில்
இரண்டிரண்டாய் வெட்டுப்படுகிறது
முட்டியில் பொதி சுமக்கும்
கழுதையெனக் கத்துகிறது
இரங்கலும் இனவாதமுமாய்
எடுத்தியம்பக் கேட்கும்
தன் குரலைத் தணித்துக்
கலவரமாகும்
அம்மன ஓட்டம்
பிரியம் கொண்டதாய்
உலகம் சுற்றத் திரளுகிறது
ஆக்கிரமிப்புகளைத் தவிர்த்தவொரு
திருவிழா வீதிக்கு....

-புலமி

எழுதியவர் : புலமி (7-Oct-16, 9:50 am)
பார்வை : 72

மேலே