வெற்றிப் பாதை

வெறித்த விழிகளில்
வலி சேர்!
வலிகளை மாற்றும்
வெறி சேர்!
வெறிதனில் நேரிய
வழி சேர்!
வந்திடும் வெற்றி
பார்! பார்!!
வல்லினமேறிய
வெறியுமிங்கே
வெற்றியாகி போகுமடா!
உன் வியர்வைத் தீண்டலில்
வெறுமை நீங்கி
வெற்றிக் கனி
வீழுமடா!
கதிரவன் காலை
தோன்றுமுன்னம்
கட்டிலில் சோம்பல்
முறித்திடு!
கரைந்திடும் காலம்
ஒவ்வொரு துளியும்
இலக்கின் தேடலில்
இறந்திடு!
வந்திடும்
தடைகள்,படைகள் ஆயிரம்
தலையில் மிதித்து
நீ நகர்ந்திடு!
தவறி கீழே வீழும்
நொடியில் தோழா!
உடனே எழுந்திடு!
காலமும் காலனும்
இடும் போட்டி
வயதென உன்னை
வளைத்திடுமே!
நல்ல காலம் நாடி
காத்திருந்தால்
வாழ்க்கை இங்கே
தொலைந்திடுமே!
வாலிப தீண்டலில்,வயதின் ஏக்கத்தில் கனவுகள் ஆயிரம் தின்றிடுமே!
நிறைவேறா கனவுகள்
கணையாகி
உன் தூக்கக் கதவுகள்
துளைத்திடுமே!
நீர்க்குமிழியொத்த
வாழ்விதில் யார்க்கும்
நினைப்பதெல்லாம்
நடப்பதில்லை!
யதார்தம் ஏற்றிட பழகிடு!
வறுமை,செழுமை இருபகுதி
உன் தகுதியை
தீர்மானித்தலாகாது!
சிந்தனை,முயற்சி
உன் சிறப்பு!
சற்றே இதிலும்
மறுப்பேது?
வயதின் கணக்கில்
சேர்வதெல்லாம்
வாழ்க்கையென்றாகாது!
நீ எட்டிப் பிடிக்க
முயலாவரையில்
நாட்கள் இன்பந்தாராது!
சிறிதோ,பெரிதோ
செய்பணி
உழைப்பு பெரிதாய்
இருக்கட்டும்!
திறனில் குறைவு
சிறிதும் வேண்டாம்!
நாளொரு வண்ணமாய்
வளரட்டும்!
மூதுரையெல்லாம்
வீணுரையல்ல!
மேலோர் சொல்
செவி ஏற்கட்டும்!
கால்கள் குறுக்கு
வழியில் நடப்பதைவிட
நேர்மையில்
நெடுந்தொலை ஓடட்டும்!
பணமோ,பதவியோ
நீயல்ல!
உன்னை
அவற்றை கழித்து
எடையிடு!
வெற்றுத் தோல்விகள்
இலக்கல்ல...
துச்சமாய் தூர எறிந்திடு!
சாதி,மதமெனும்
சாக்கடை விலக்கி
நற்பண்பினில்
உறவுகள் சேர்த்திடு!
மிச்ச கதையெல்லாம்
அனுபவம் கூறிடும்
கால ஓட்டத்தில்
ஒன்றிடு!!
***********************

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (12-Oct-16, 11:57 am)
Tanglish : vetrip paathai
பார்வை : 3337

மேலே