வாழ்க்கையின் முழுமை

..."" வாழ்க்கையின் முழுமை ''''...

வருத்தமே என்றாலும்
வசந்தமே என்றாலும்
துணையாய் நானென
தோள்சாயும் சொந்தம் ,,,

வாழ்க்கை பாதையின்
முழுப்பாதியும் அவளே
சிறுச்சிறு கற்களும் உண்டு
சிறந்ததோர் காதலுமுண்டு,,,

லப் டப் ஒலியை மாற்றி
லவ் டாப் என்றவாறே
என் இடப்பக்கத்தில்
இதயமாய் துடிப்பவள் ,,,

ஆயிரமுறை பருகினாலும்
ஆனந்தத்தின் எல்லையதை
அள்ள அள்ள குறைந்திடாத
அமுதசுரபி அவளன்றோ ,,,

சிணுங்களில் சிறைபிடித்து
சீண்டலில் அரவணைத்து
தீக்குச்சியை உரசியவள்
பனிபோல் குளிர்வித்தாள் ,,,

விழியசைவில் காதலும்
மெளனத்தால் கதைகளும்
கட்டிலறை கோட்டையில்
முடிசூடும் ராணியவள் ,,,,

புயலின் புன்சிரிப்பையும்
தென்றலின் வேகத்தையும்
மென்மையாய் எனக்கு
கற்பித்த கல்விக்கூடம் ,,,

எழுத்துக்களை கோர்த்து
எண்ணங்களை சேர்த்து
நான் ரசித்தே இன்னும்
வாசித்து முடியா புத்தகம் ,,,

விழுந்துவிடா தாங்கிடும்
என் விலாயெலும்பிலே
எனக்காகவே பூத்துவிட்ட
புன்னகை மலரன்றோ ,,,

எனக்குள்ளே அவளும்
அவளுக்குள்ளே நானும்
பூரணம் அடைந்துவிட்டன
எங்கள் பிறப்பின் அர்த்தம்,,,

என்றும் உன் இதயத்திலிருக்கும் ,,,
பனைக்குளம் சகூருதீன்...

எழுதியவர் : பனைக்குளம் சகூருதீன்... (12-Oct-16, 8:57 pm)
Tanglish : valkaiyin muzhumai
பார்வை : 187

மேலே