பேனா முனையில் பெண்மையின் துளிகள்-துளி-04
பேனா முனையில் பெண்மையின் துளிகள்
துளி....04....
சிறகிருந்தும் பறந்திடமுடியா
கூண்டுக்கிளியாக தனி அறையில்
சிறைபட்டுக்கிடக்கிறாள்...
பள்ளி செல்லும் வயதில் அவளும்
பலரின் இச்சை தீர்க்கும்
காமப்பொருளாய் மாறி நிற்கிறாள்...
பருவம் கூட அடையா வயதில்
பல செல்வந்த முதலைகளின்
காமப்பசி தீர்க்கும் கருவியாய்
மாறி நிற்கிறாள்...
வாழ வேறு வழியிருந்தும்
திசை மாறிய அவள் வழியை
மாற்றிட வழியற்று தவிக்கிறாள்...
வாயிருந்தும் ஊமை வேடம் போடுகிறாள்
பத்து பேர் சேர்ந்தே அவளை
வேட்டையாடினாலும்...
எதிர்த்து எதுவும் செய்ய முடியாது
தனிமையிலே மௌனமாய் அவளும்
கண்ணீர் வடிக்கிறாள்.....
பத்து மாதம் சுமந்தவளே
மகள் என்றும் பாராது அவளை
பணத்திற்காய் விலை பேசுகிறாள்..
சூதுவாது அறியாத பெண்மை அவளையும்
விலைமாதுவாக்கி வேடிக்கை பார்க்கிறாள்...
பெற்றவள் முன்னேயே ஆடையற்று நிற்க
வெட்கும் பெண்மையை
அடுத்தவன் முன் அனுப்பி அதில்
வரும் பணத்தில் தானும் குளிர் காய்கிறாள்...
தாய்மை எனும் உறவினையே கேவலமாக்கி
மகளையே தன் சுயநலத்திற்காய்
அடகு வைக்கிறாள்...
சிறு காயம் பட்டாலும் துடிதுடித்து போகும்
அன்னைகள் மத்தியில்
கண் முன்னேயே மகள் சிக்கி கதறி
அழுவதை கண்டும்...
பணக்கட்டுகளை எண்ணிடும் தாய்மைக்கே
கலங்கம் விளைவிக்கும் இவள் போன்ற
ராட்சசிகளை என்னவென்று சொல்வது...??
தன் பெண்ணின் பெண்மையையே
விலைபேசி அதில்
சொகுசு வாழ்க்கை வாழ்ந்திடும்
இவள் போன்றோரை
எந்த இனத்திற்குள் சேர்ப்பது...??
என்ன தண்டனை தான் கொடுப்பது...??
இதை நான் கவிதையாக எழுதவில்லை....என் உணர்வுகளை....என் மனதின் கேள்விகளை....உண்மை நிகழ்வுகளை அப்பிடியே கூறியுள்ளேன்....உங்கள் ஆதரவோடு துளிகள் தொடரும்......
-உதயசகி-