என் பாடு என்னோடு

சார்பற்ற தேசமென
சாசனம் பேசுகிறது
சாமியார் ஆனாலும் - சாதி சமய
வாசனை வீசுகிறது

விண்ணப்பம் ஏந்தி - என்ன
வரிசையில் நின்றேனா - இல்லை
வேண்டும் வேண்டுமெனக் கேட்டு - கீழே
விழுந்து புரண்டேனா
சம்மதமும் இல்லை சம்மந்தமும் இல்லை
முத்திரைக் குத்திஎன்னை- ஓட்டி
சாதி சமயப் பட்டியில் அடைத்தவர்
பட்டியலைக் காணேன்
முட்டி வெளியேறக் குட்டிக் கரணம் அடிக்கிறேன்

சாதி அதிபர்கள் சவுக்கோடு அலைய
சாமிக்கும் எனக்கும் சிண்டு முடிந்து
சபிக்கிறது என்னை சமயக் காப்பகம்
நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கிறது
சாதிவாரி மதவாரி மந்திரிமார் சபை
பட்டது போதும் சட்ட வித்தகரிடம்
சாவுகிராக்கிப் பட்டம் தான் கிட்டியது

நெற்றியில் நாலணா ஒட்டி
நீட்டிப் படுத்தாலும்
தட்டி எழுப்பி தத்து எடுக்க
தயாராய் நிற்கிறது
சாதிவாரி மதவாரி சுடுகாடு
சரி விடு என்பாடு என்னோடு
இனி அது சந்ததிகளின் பாடு

நரியனூர் ரங்கநாதன், செல் : 9442090468

எழுதியவர் : நரியனூர் ரங்கநாதன் (14-Oct-16, 3:12 pm)
பார்வை : 161

மேலே