வான் நோக்கு தமிழா

எல்லை தாண்டி அடிக்கடி
தொல்லை தரும் அன்பில்லா
அந்நியனை தண்டிக்க
ஆயுதமெடுத்தால் அவனும் எடுப்பான்
அழிவு இன்னும் வரும் ஏராளமாய்.
நம்முயிர் பல கொன்று
நாடகம் பல ஆடுபவனை
ஆயுதமேதுமின்றி அமைதியாய்
அழிக்க என்ன செய்ய..?
கூடுகிறது சபை..
''தொல்லையே தந்தாலும் அவனும்
தனயன் என்பதால் 'சிந்து' தாயும்
எல்லை தாண்டி நெல் வளர்க்கிறாள்.
அவளன்பை தடுக்க வேண்டும்
அணைகள் பல கட்டி''
''அருமையான வழி..!
அமைதியாய் அவனை
அழிக்க அருமையான வழி''
'அரசியல்' தெரிந்தவர்கள்
ஆனந்தமாய் சிலாகிக்கிறார்கள்.
எதிரிக்கு கொடுக்க நினைக்க
இந்த தண்டனையைத்தானே
உரிமையான நீரை
நாம் அமைதியாய்க் கேட்க
அறியாமையை மட்டுமே
அறிவாய்க் கொண்ட நெருப்பை
நீதியென நமக்குத் தருகிறான்..!
இது நீதியில்லை என்றும்
உச்ச மன்றம் உரைத்தும்
நீதியை மறுப்பது தான்
தன் தருமமென
தகராறு செய்கின்றான்.
தட்டிக் கேட்க வேண்டியவர்களோ
தமக்கொரு தனிக் கணக்கைப்
போட்டுக் கொண்டு
ஐம்பது ஆண்டுகளாய்
அடம் பிடித்துக்கொண்டு
அவன் எடுக்கும் தடிக்குத்தான்
புடம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்...
தாகம் தீர்க்கா இத்தகராறு
நம் பங்காளனுடன் என்பதால்
நாம் வார்த்தையில் கூட
வன்வாளெடுக்கத் தயங்குகிறோம்.
படித்தோ படிக்காமலோ
தெரிந்தோ தெரியாமலோ
அறிந்தோ அறியாமலோ
வள்ளுவம் நற்றமிழர் நம் வாழ்வோடு
இன்னும் ஒட்டி வருவதால்
'வான்' நோக்கு தமிழா...!
'மேல்' இருந்து வழியும் தீர்ப்பு
நமக்கு வரும் நீதியாய்.
இல்லையெனில்
என்றும் பொழியும் நல் நீராய்.
நம்பி வான் நோக்கு தமிழா..!