வஞ்சிப்பா - வெண்பாக்கள்

கண்டாங்கிச் சேலையில் கண்கவர்ந் தாளிடையில்
மண்குட மேந்தும் மலர்க்கொடியாள்!- கொண்டையில்
சூட்டிய பூவாசம் சொக்கவைக்கும், காதிலே
மாட்டலுடன் கம்மல் வனப்பு .

வனப்புடன் புன்னகைத்து வஞ்சியவள் செல்ல
மனத்துள் பெருகும் மலர்ச்சி ! - கனவிலும்
வந்து முகம்காட்டும் மங்கையை அன்புடன்
சொந்தங்கொண் டாடல் சுகம் .

சுகந்தரும் தென்றலாய் சுந்தரப் பார்வை
அகம்மலரச் செய்யும் அழகாய்! - பகலில்
நிலவாய்க் குளிர்வித்து நெஞ்சம் வருட
வலம்வரும் பெண்ணவளை வாழ்த்து .

வாழ்த்தில் குளிர்வாள் வயல்வெளிக் காற்றென
ஆழ்கடல் முத்தாய் அகம்பூப்பாள் - வாழ்க்கைப்
படகைச் செலுத்துவாள் பாங்கா யவளும்
கடமையைச் செய்வாள் கனிந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Oct-16, 9:52 pm)
பார்வை : 95

மேலே