வெள்ளைக் காகிதம்

உன் மௌனத்திலிருந்து புறப்படும்
காதலின் ஓவியத்தை
தாங்கிக் கொள்வதற்காக
தவம் கிடக்கிறது
என் மனதைப்போல ஒரு
வெள்ளைக் காகிதம்

உன் சம்மதம் என்னும்
கையெழுத்து இல்லாத காரணத்தால்
கடிதம் என்னும் கருக் கட்டாமல்
கிடக்கிறது ஒரு மலடியைபோல
அந்த வெள்ளைக் காகிதம்

எழுதப்படாத தொகையினை
ஏற்றிக்கொள்ளும் பக்குவத்துடன்
அச்சிடப்படாத காசோலைக்கான
வெள்ளைக் காகிதம் ஒரு
பூச்சியத்தைபோல் பெறுமதியற்றுக் கிடக்கும்
நாளைய இராச்சியத்தை ஆள்வதற்காய்!

எல்லா முத்திரைகளினதும்
முகவரிகளைக் காட்ட
தூய்மை கொடி பிடித்து
அச்சகங்களின் காலடியில்
அஹிம்சை போராட்டம் செய்யும்
வெள்ளைக் காகிதம் கையில்
வராத வானவில்லையும்
கனவில் தொலைந்த காட்சிகளையும்
கண் முன் காட்ட கை கொடுக்கும்
கையாகிக், கடவுளாகிறது.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Oct-16, 6:25 am)
Tanglish : vellaik kaakitham
பார்வை : 86

மேலே