உத்தமனின் ஒப்புதல் வாக்குமூலம்
நான் எப்போதும்
சும்மா இருந்ததில்லை
சம்பளம் இல்லா வேலைக்காரனாய்
சமுதாயத்திற்கு உழைத்தவன்
சாலைகளில் செல்வோரை
பதம் பார்க்கிறதென்று
வேலியோரம் படர்ந்திருந்த
முட்செடிகளை அகற்றியுள்ளேன்
இந்த செடிகள்
என்ன பண்ணியது
என ஏளன பேச்சுகள்
வேலியின் சொந்தக்காரரிடமிருந்து
குளங்களில் சேற்றை
தூர் வாரினேன்
கரைகள் கட்டினேன்
ஊராட்சி தலைவர்
ஏனப்பா இந்த வேலை
அதற்காகத் தானே
நாங்கள் இருக்கிறோம்
நீ சும்மாயிரு என்றார்
குளத்து மண்ணெல்லாம்
தனியார் பள்ளி மைதானங்களில்
பொறுப்புள்ள தலைவரின்
பொன்னான செயலாள்
ஊருக்குள் குடிநீர் பஞ்சம்
தண்ணீர் தொட்டி கேட்டு
மனு எழுதினேன்
மாவட்ட ஆட்சியருக்கு
அதன்பிறகு
ஆட்சியர் அலுவலகம் செல்லும்
முகவரி இல்லா
எல்லா மனுக்களுக்கும்
நானே பொறுப்பாளி ஆக்கப்பட்டேன்
ஊரெங்கும் கள்ளச்சாராயம்
காவல்துறை பாதுகாப்புடன்
புகார் கொடுத்தால்
சாராய வியபாரி கையில்
புகார் மனுவுடன் வீட்டு வாசலில்
ஏனடா ஊர் வம்பை எல்லாம்
விலைக்கு வாங்குகிறாய் என
வீட்டிலேயே ஏச்சும் பேச்சும்
சாப்பாடு தண்டச்சோறானது
வேலைக்குச் சென்றால்
முதலாளிக்கு சக தொழிலாளிகள்
இழைக்கும் துரோகம் கண்டு
நெஞ்சு பொறுக்கவில்லை
வரி கட்டாமல் நாட்டிற்கு
முதலாளி செய்யும் துரோகம் வேறு
நமக்கு ஏன் என இருக்க முடியவில்லை
நாட்டில் நடக்கும் நாடகத்தில்
ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன்
நாம் மட்டும் யோக்கியனாக இருப்பது
தவறு என்று
உள்ளாட்சி தேர்தலில்
தலைவர் பதவிக்கு போட்டியிட்டு
உத்தமனாய் நடிப்பதென்று
என் உள்மனதிடம்
ஒப்பந்தம் போட்டுவிட்டேன்
நாடும் நாட்டு மக்களும்
என்னிடம் நடந்து கொள்வதை பொறுத்து
என் நடத்தையை அமைத்துக் கொள்வேன்.