மண்ணில் வளமாகும் மாண்பு - நேரிசை வெண்பாக்கள்
எங்கெங்குப் பார்த்தாலு மெத்திக்கும் நெல்வயல்கள்
பங்கிடவும் வேண்டாமே பாரினிலே - அங்கங்கே
விண்ணோங்க வீடும் விளைத்திடும் சோகத்தை
மண்ணில் வளமாகும் மாண்பு .
மாசுதனைப் போக்கிவைத்து மாண்புறவும் வாழ்வதற்கு
தூசுதனை சுத்தமாக்கித் தூய்மைதனை - வீசுதற்குக்
கண்ணிலே தோன்றும் கதிர்களைப் போற்றுவோம்
மண்ணில் வளமாகும் மாண்பு .
தீதிலா வாழ்வதனைத் தித்திக்கும் வாழ்க்கைக்கு
மேதினியில் நாம்பெறவும் மென்மேலும் - வீதியிலே
உண்ணும் போருட்களின் உண்மைநிலை கண்டிடில்
மண்ணில் வளமாகும் மாண்பு .
பார்கின்ற பூமித்தாய் பாசமுடன் நோக்கிடுவாள்
தீர்க்கின்ற தீவினைகள் தீர்த்திடுவாள் - ஈர்ப்புடனே
எண்ணம் முழுவதிலு மேற்றமாய் நின்றிட்டால்
மண்ணில் வளமாகும் மாண்பு .
கண்ணில் தெரிகின்ற காட்சிகள் யாவினையும்
பண்ணி லெழில்மிகு பாக்களும் - விண்ணோங்க
எண்ணம் மிகுந்திட எற்றமாய்ப் பாடிட
மண்ணில் வளமாகும் மாண்பு .