பேனா முனையில் பெண்மையின் துளிகள்-துளி-05
பேனா முனையில் பெண்மையின் துளிகள்
துளி....05....
முகமறியாமலே முகநூலில் அறிமுகம்
பருவமடைந்து பள்ளி செல்லும் வயதில்
பாதை மாறிய பயணம்...
பெற்றோரை மறந்து முகவரி தெரியாத
எவனோ ஒருத்தன் மேல் பாவை அவளும்
கொண்ட காதல் மயக்கம் ...
பாதாளத்தில் அவளை குழி தோண்டி
புதைத்திட வைத்தது....
முகத்திரை மறைத்த ஆடவன் மேல்
அவனே உலகம் என்று அடிபணியவைத்தது...
காதல் கொண்ட உள்ளம்..
அவனை மட்டுமே உத்தமன் என நம்பி
தன்னையே தான் மறந்து அவனையே
அனுதினமும் நினைத்திட வைத்தது...
இறுதியில் அவன் மேல் கொண்ட காதல்
அகிலத்தை துறந்து உயிரை
மரித்துக்கொள்ளும் நிலைக்கு அவளை
தள்ளியது...
முகவரியின்றி வந்தவன் அவனும்
காதல் நாடகம் முடிந்ததும் தடயம்
இல்லாது மறைந்து போனான்....
காதலுக்குள் மூழ்கிய பெண்மை அவளும்
மீள முடியாது உயிரோடு சிக்கித்தவித்தாள்...
மனம் மரத்து போய் இறுதியில்
மரணத்தை அவளும் துணைக்கு
அழைத்துக்கொண்டாள்...
காதல் வேடமிட்டவன் வேலை முடிந்ததும்
வேறு பெண்ணை தேடி விலகிவிட்டான்...
அவனின் மாயவலையில் சிக்கிய மங்கை
இவளும் பொய்யான காதலுக்காய் தன்
உயிரை துறந்து விண்ணுலகம்
சென்றுவிட்டாள்...
காதலிக்கும் போதும் பெற்றவர்கள்
கண்களுக்குள் தோன்றவில்லை....
உயிரை மாய்த்துக்கொள்ளும் வேளையிலும்
அவர்கள் அவள் நினைவுகளிற்கு எட்டவில்லை...
உருவமே அறியாத அந்த வேடமிட்ட உத்தமனுக்காய்
தன் உயிரையே தியாகம் செய்த இந்த பெண்மையை
என்னவென்று சொல்வது.....??
இது அண்மையில் நடந்த உண்மைச்சம்பவம்....இது போன்ற முகநூல் காதல்களால் இதுவரையில் எத்தனையோ தற்கொலைகள் இவ்வுலகின் எங்கோ ஒரு மூலையில் தினம் தினம் நடந்துகொண்டு தான் இருக்கின்றது.பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கூட தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் பல...
இதை நான் கவிதையாக எழுதவில்லை....என் உணர்வுகளை....என் மனதின் கேள்விகளை....உண்மை நிகழ்வுகளை அப்பிடியே கூறியுள்ளேன்....உங்கள் ஆதரவோடு துளிகள் தொடரும்......
-உதயசகி-

