கனவின் கிடைத்த வரம் --முஹம்மத் ஸர்பான்
தென்றல் அணைக்க சோலைக்குள்
கன்னி நுழைந்தாள்;ரோஜாக்கள்
பூத்தன;செண்பகம் சிரித்தது;விழிகள்
மயங்கின பிரகாசத்தில்,மாந்தை
நடக்க கல்,முள் நிறைந்த பாதைகள்
பூவிதழ்களால் தூதுவனானான்;சிட்டும்
பச்சைக் கிளியும் அவளோடு சென்றன.
பனிமழை தூவ நந்தவனத்திற்குள்
அவள் செல்ல;அழகான கவரி மான்கள்
விழிகளால் உற்றுப் பார்த்தன;காக்கை
கூட்டங்களுக்குள் நிர்க்கதியான ஊமைக்குயில்
அவள் கன்னம் கண்டு அறியாமல் கூவியது;
இரை தேடிப் பறந்த வெண்புறா தான் ஜோடிதான்
நந்தவனத்தில் நிர்க்கதியாகி விட்டாளோ
என்று அவள் தோளில் சாய்ந்து கொண்டது..,
பெரிய கன்னம் கொண்ட ஆந்தை
பார்வை மாறாது அவளை ரசித்தது;
மரங்களில் வசிக்கும் மைனாக்கள்
வாயடைத்து போனது;வர்ணத்தோகை
கன்னி மயில் தன் கர்வத்தை மறந்து
இரேகை போட்டது;பேதை நடை
அன்னம் போல் அழகாய் இருந்தது;
தேவதை மலை உச்சிக்கடியில் சென்றாள்.
என் பார்வை திரும்பி பார்க்க அவளில்லை
முகம் மறைத்த அழகினை ஐவகை பூமியிலும்
தேடினேன்,காணவில்லை.அவள் நடந்த
பாதைகளில் தடயமில்லை;ஏக்கத்தோடு நானிருக்க
இருளிலிருந்து மண்ணிற்கு விண்ணின் வெள்ளொளி
சுடரிட்டது;பார்வை பாய்ந்தது விண்ணுக்கு
வட்ட வடிவ புருவம் ஒளிர்ந்தது வெண்ணிலவாய்.,
அறிந்தேன்,கனவில் வந்தது பெண்ணிலாயென்று..,