அழியாத நினைவுகள்
சில நேரம்
ஈர்த்து இழுத்தும்
சில நேரம்
விலக்கியும் தள்ளும்
ஒரு துருவம் மாறும்
மின்காந்தம் நீ …!
அந்த காதல் வண்டிற்கு
மட்டுந்தான்
தெரிந்திருக்கிறது
எனக்கான மகரந்தங்கள்
உன்னிடத்தில் மட்டுந்தான்
உள்ளதென்று …!
காதல் களத்தில்
சிக்கித்தவிக்கிறேன்
உன் விழிகள் வகுக்கும்
வியூகம் புரியாமல்…!
ஒரு கிண்ணம் அமுது
ஒரு கிண்ணம் நஞ்சு
எது உன் பார்வைக்கு ஒப்பு
என்று கேட்டார்கள் …
இரண்டையும்
கலந்துவிட்டேன் நான் …!
காதல் சூட்டில்
என்னுயிரை உறுக்கினாய்..
நீ பிரிந்ததும்
கண்களின் வழியே
கண்ணீராய் வழிகிறது
என்னுயிர்..!
எனை நீ பிரிந்ததும்
உன் நினைவுகளையும்
என்னிலிருந்து
பிரித்துவிட பார்க்கிறேன்
உயிர் வந்து
முன்னே நிற்கிறது.....!
உந்தன் நினைவுகளை
ஊட்டும் கனவுகளைக்கூட
தவிர்த்துவிட பார்க்கிறேன்
தூக்கம் என்
விழிகளைத்
தழுவ மறுக்கிறது....!
காதலை கவியில்
புனைய மறுத்தேன்...
என் கற்பனைகள் எங்கோ
களவாடப்பட்டதைப் போல்
உணர்கிறேன்.... !
மறவாமலிருக்க
மதியில் பொறித்து விட்டேன்
மறக்கவேண்டும்
உன் பெயரை என்று....
அனிச்சையாய் திரும்புகிறேன்
உன் பெயர் கேட்கும் திசையில்
மதி விழிப்பதற்குள்....!
உன்னை பற்றிய
நினைவுகளுக்கு
தடையிட பார்க்கிறேன்...
அவை வரும் பாதை
மர்மமாகவே இருக்கிறது.....!
வலுக்கட்டாயமாய் உனை
வெறுக்க நினைக்கிறேன்
வெறுப்பு என் அறியாமையை
கண்டு நகைக்கிறது....!
உன் பிறந்த நாளை
மறக்கப் பார்க்கிறேன்...
என் பிறந்த நாள்
கொண்டாட மறுக்கிறது....!
சுமையான உன்
நினைவுகளை
இறக்கி வைக்க பார்க்கிறேன்...
சுமை இன்னும்
கூடித்தான் போகிறது...!
உண்மையில்
ஞாபக மறதி
நோயல்ல..
அது ஒரு வரம்...
கிடைத்தால்
மறக்க முயல்வேன்
உன் நினைவுகளை....!