உணர்த்தியதும் உணர்ந்ததும்

அத்தனை நாள்
நலங்காத்த வைத்தியரை
பாடைமுன்
வடமாக அணிவகுத்து
வாழ்வின் கதி
அறியச் சொன்னான்...
"ஊர் கொண்ட பிணியகற்ற
ஆளில்லை!
தனியொருவன்
தான்கொண்ட நோயகற்ற
தனியாரசு இத்தனை
பேரா?!
வாழ்ந்தான் பார்!" என்றது
வாய்பிளந்து ஒரு
கூட்டம்...
உலகெல்லாம்
கைக்கொண்ட பேரரசன்
கைப்பொருளை
கடுகளவும் கல்லறையில்
கரக்காத உண்மை சொல்ல
வழிநெடுக உறுபொருள்
உதிர்க்கச் சொல்லி
உத்தரவிட்டான்...
பொறுக்க வந்த
பெருங்கூட்டம்
பிரமிப்பாய் நவின்றதங்கே
"புதைத்த பின்
பெட்டியையும்
புடமிட்டு பாரென்று!..."
கண்டம் வென்ற
வலி கரத்தோன்
கொண்டு போக
ஏதுமில்லை
கரமிரண்டும்
துளையின்வழி
காணும்படி
நீட்டச் சொன்னான்...
கண்ட கூட்டம்
சொன்னதங்கே
"கடைவிரலில்
சொலிப்பதென்ன?
தங்கமா? வைரமா?!..."
ஆலோகம் நுழைந்தபடி
அலெக்ஸாண்டர்
அலுத்துக் கொண்டான்:
"நரகமிதை வெல்வதற்கா
நாளெல்லாம்
நாசம் செய்தேன்?!!"

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (30-Oct-16, 10:51 am)
பார்வை : 89

மேலே