மீண்டும் ஒரு வதம்

மீண்டும் ஒரு வதம்

நடராஜனின் உயிரற்ற உடலைச் சுமந்து கொண்டு மாலிம் வட்டாரப் போலிஸ் வண்டி அவனது வீட்டை விட்டுப் புறப்பட்டது. தாமான் மாலிம் ஜயா மக்கள் அவரவர் வீட்டின் முன் நின்று வேடிக்கைப் பார்த்த களைப்போடு மனதில் தோன்றிய கருத்துகளைக் குடும்ப உறுப்பினர்களின் காதைக் கடித்தவாறு வீட்டுக்குள் நுழைந்தனர். பிரேதப் பரிசோதனைக்காகப் போலீஸ் வண்டி மலாக்கா மருத்துவமனையை அடையும் முன்னரே அவனைப் பற்றிய பேச்சும் நின்று போனது ; ஆனாலும் அக்காரியத்தைச் செய்தவர் யாராக இருக்க முடியும் என்பது தான் கேள்விக்குறியாக அனைவரின் மனதிலும் தில்லானா ஆடிக்கொண்டிருந்தது.
போலீஸார் துப்பு துலக்குவதற்காக சில அண்டை அயலாரை அணுகிய போது பலர் “சாயா தாக் தாவ்! சாயா தடா கெலுவார் . . . .” போன்ற உப்புசப்பற்ற பதிலையே வழங்கினர். சில வீடுகள் தள்ளியிருந்த தேவியோ “நான் அவரோட முதல் மனைவி இறந்த பிறகு அந்த வீட்டுக்குப் போறதில்லை.அந்த மனுஷி ரொம்ப நல்லவங்க.ஆஸ்துமா நோயில இறந்துட்டாங்க.அதுக்கப்புறம் அந்த ஆள் கிட்டே நாங்க யாரும் பேசறதில்லை ” என்று முற்றுப்புள்ளி வைத்து தன் வாக்குமூலத்தை முடித்துக் கொண்டார்.
அரவிந்த் “எனக்கு எதுவும் தெரியாது.நான் வீட்டுக்கு வந்து பாத்தப்ப தரையில உழுந்து கெடந்தாரு.எங்க அப்பா ரொம்ப நல்லவரு”என்று சொல்லி விட்டு போலீஸ் வண்டியைப் பின் தொடர்ந்தான்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு கிழித்தல், தோண்டல் , வெட்டுக்குத்து எனக் கடைசியாகத் தையலுடன் தைக்காத துணியான நடராஜனின் உடல் அவனது மரணத்திற்குக் காரணம் இன்சுலினும் போதை மருந்தும் ஒரு சேரப் பயன்படுத்தியது தான் என்ற ‘நற்சான்றிதழுடன்’ சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டது. அங்கே அவனது வளர்ப்பு மகன் அரவிந் அழத் தெரியாமல் அழுது கொண்டிருந்தான். அவனது நண்பர்கள் அவனைச் சுற்றித் தொங்கிய தலையுடன் நின்றுகொண்டிருந்தனர்.
தன் அப்பாவின் தொலைபேசிப் பதிவில் இருக்கும் பல தொடர்பு எண்களை அலுத்திப் பார்த்தான். எந்த அழைப்பும் பதில் தருவதாக இல்லை.செய்வதறியாது இருபது வயதான அரவிந் சவக்கிடங்கின் வாசலில் நின்றுகொண்டிருந்தான். எப்படித்தான் இந்த ஈமச்சடங்கு செய்பவர்களுக்குத் தகவல் கிடக்குமோ தெரியாது.உறவினர் கூடுமுன்பே நான் நீயெனப் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து விடுகிறார்கள். உறவென்று பெரியவர் யாரும் இல்லாத வகையில் அவனே எல்லாவற்றையும் முடிவெடுத்துச் செய்யவேண்டியதாயிற்று. வந்த உறவையெல்லாம் எட்டி உதைத்து வெட்டி விட்டவன் இவன் தானே! இன்று அனாதையல்ல; எப்போதுமே அவன் அனாதை தான்.அதைப் போக்க இருந்த ஒரே உறவும் இன்றோடு காலாவதியாகிவிட்டது.
அவன் உயிரோடு இருந்த போது எல்லா காரியங்களுக்கும் செல்லப்பிள்ளையான அரவிந்தே முடிவெடுக்கும் உரிமையைத் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தான். தனக்கு வேறு யாரும் இல்லாத காரணத்தால் அரவிந் முடிசூடா கொடுங்கோள் அரசனாக நடராஜனை ஆட்சி செய்து வந்திருந்தான். எந்தக் கடையில் என்ன சாப்பிடுவது , என்ன படம் பார்ப்பது, என்ன உடை வாங்குவது இப்படி அனைத்துமே அவனது ஆட்சிதான்; ஒன்றைத் தவிர!
நடராஜன் ஒரு தனியார் பாதுகாவலர் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராகவும் அலுவலகப் பணியாளராகவும் இளவயது முதல் வேலை செய்து வந்தான். தன்னை விட எட்டு வயது அதிகம் கொண்ட மரியாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டான். கௌரவமான குடும்பத்துடனான உறவையும் நன் மதிப்பைக் கொண்ட பொற்றோரையும் அந்தத் திருமண பந்தம் முடக்கிவிட்டது. மணமொடிந்த அவனது தந்தை பிறர் முகத்தில் விழிக்கத் தைரியமின்றி தன் கிராமமான தூத்துக்குடிக்கே திரும்பிவிட்டார். காலம் கடந்தது.
உதிரும் தருணத்தில் தன் கணவன் அனாதைபோல் கண்ணுக்குத் தெரியா தூரத்திற்குச் சென்று நோய்வாய்ப்பட்டு மனம் நொந்து இறந்த தகவல் அறிந்த கமலா அழுது புரண்டாள். கடைசிக் காலத்தில் நோயுற்ற கணவனைப் பிரிந்து வாழ நேர்ந்ததையும், மரணப்படுக்கையில் துன்புற்ற வேளையில் மனைவியாகப் பணிவிடை செய்ய முடியாமற் போனமைக்கும் தன்னை ஆளாக்கிய மகன் நடராஜன் கமலாவின் கண்ணுக்கு எமராஜனாகத் தெரிந்தான். சுற்றத்தாரின் துணையோடு கணவனின் ஈமச்சடங்கில் கலந்து கொள்வதற்காகப் பயணப்பட்டவள் ; பின்னர் திரும்பி வரவே இல்லை. அவ்வப்போது அங்கிருந்து வருபவர்களிடம் தன் மகள்களுக்கு கேழ்வரகு , ஊறுகாய் , இனிப்பு வகைகளைக் கொடுத்து அனுப்பி வந்ததும் நாளடைவில் முற்றுப் பெற்றது.
மரியாவின் வாழ்வில் இணைந்து கொண்ட நடராஜன் அவளது பெற்றோரின் வீட்டைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டான்.நோயாளியான தன் மகளுக்கு நல்லது செய்யும் எண்ணத்தில் அந்தக் கிழ ஜோடி எடுத்த முடிவது.அவளது ஆஸ்துமா நோயைக் காரணங்காட்டி அவளைத் தள்ளியிருக்கச் செய்தான். அவன் வெளியில் மற்ற பெண்களோடு போடும் ஆட்டங்களைக் காதால் கேட்டபோது கண்ணீர் சிந்தினாள். அவளது பெற்றோரின் சேமநிதிப் பணத்தையும் பல பெண்களுக்காகக் கரைத்து முடித்தான்.அவள் வீட்டில் இல்லாதபோது தன் பெண்தோழிகளை வீட்டிற்கு அழைத்து வருவதையும் அண்டை அயலார் கூறக் கேட்டிருந்தாள்.மரியாவின் நோயும் அவனை விட அதிக வயதும் அவனுக்குச் சிறந்த சாக்குப் போக்காக அமைந்தது.
மரியாவின் தனிமையைப் போக்கும் வண்ணம் தனது நண்பன் ராசப்பாவின் குடும்பத்தைத் வீட்டின் ஓர் அறையில் வாடகைக்குத் தங்கச் செய்தான்.அவனது மனைவி கற்பகம் இளமை முறுக்கோடு அவனது கண்ணுக்கு அளித்த விருந்தின் பலனாய் இந்த ஏற்பாடு நடந்தேறியது.ராசப்பாவுக்குத் தான் வேலை செய்யும் நிறுவனத்திலேயே பாதுகாவலர் வேலையை வாங்கிக் கொடுத்து இரவு பகல் வேலை செய்யுமாறு அட்டவணை அமைத்தான்.
தொழிற்சாலையொன்றில் மரியாவை வேலையில் சேர்த்தான். அதிகாலையில் மரியாவைக் வேலைக்குக் கொண்டு போய் விட்ட பின் , தன் வேலையாக சில பாதுகாவலர்களை அவரவர் கடமையாற்றும் இடத்தில் விட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவான். அங்கே கற்பகம் அவனது எல்லாப் பசிக்கும் உணவிட்டாள்.கருவுற்ற கற்பகத்தை மரியா தன் சகோதரி போல் கவனித்துக் கொண்டாள்.ஆயினும் மனதில் ஏதோ முள் தைத்தாற்போன்றதொரு வலி இருந்து கொண்டே இருந்தது.
பிரசவத்திற்காக கற்பகம் தாய் வீடு போயிருந்தாள். குழந்தை பிறந்த செய்தியறிந்த ராசப்பா விடுப்பு எடுத்துக் கொண்டு போனவன் திரும்பி வரவேயில்லை.மூன்று மாதத்திற்குப் பின், லொடலொட வென ஒரு புரோத்தோன் வண்டி வீட்டின் முன் வந்து நின்றது.காரிலிருந்து இறங்கி வந்த ராசப்பாவும் கஸ்தூரியும் துண்டால் சுற்றிப் போர்த்தப்பட்டிருந்த குழந்தையை மரியாவின் கையில் கொடுத்துவிட்டு “கொஞ்ச நாளைக்குப் பிள்ளை உங்களிடம் இருக்கட்டும் ” என்று சொல்லிச் சென்றவர்கள் பின்னர் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை.தொலைபேசி எண்ணையும் மாற்றிக்கொண்டனர்.
அதற்கான காரணம் சொல்லித் தெரிவதற்கில்லை. அவன் வளர வளர ஒரு குட்டி நடராஜன் வளர்வதை அந்த மாலிம் வட்டாரமே அறிந்தது. மன உளைச்சலுக்கு ஆளான மரியா மருத்துவமனையில் பெரும்பாலான நாட்களைக் கழிக்கவேண்டியதாயிற்று. குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு பரிமளா என்ற யுவதி நடராஜனின் அவன் தயவோடு தஞ்சம் புகுந்தாள். இளங்குமரி பரிமளா அவனுக்குத் தங்கப் பதுமையானாள். ஊரார் பலர் மரியாவைச் சந்தித்து உண்மைச் சூழலை எடுத்துக் கூறினர். பெரும்பாலான நாட்களில் நடராஜனைப் பரிமளாவுடன் பல இடங்களில் மிக நெருக்கமான சூழலில் கண்டதையும் கூறியிருந்தனர்.
ஒருநாள் மருத்துவமனையில் மரியாவை இறக்கி விட்ட பின் , “முடிந்தவுடன் கோல் பண்ணு வரேன் ” என்று சொல்லிவிட்டு வேலையாட்களை வேலையிடத்தில் சேர்க்க வேண்டும் என்று கிளம்பிவிட்டான். இரண்டு முறை சுவாச வாயு செலுத்திய பின் மரியா பல முறை நடராஜனின் எண்ணை அழுத்தியும் ஒரு பயனும் இல்லை. அவனது கைப்பேசி முடக்கி விடப்பட்டிருந்தது. கையில் பணமில்லாத காரணத்தால் மரியா மிகுந்த துன்பத்தோடு நடந்தே வீடு திரும்பினாள். அவன் வீட்டில் இருப்பதற்கான அறிகுறியாக இரும்புக் கடைக்குச் சொந்தமாக வேண்டிய அவனது வண்டியும் வாசலில் நின்றது.பரிமளாவின் காரும் ஜோடியாக நின்று கொண்டிருந்தது. கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.தொலைகாட்சியில் ஏதோ பழைய படம் ஒளியேறிக்கொண்டிருந்த சத்தமும் கேட்டது.சத்தம் சற்று அதிகமாக வைக்கப்பட்டிருந்ததால் மரியா வீட்டு வாசல் வரை வந்து நிற்பதை உள்ளே இருப்போர் அறிந்து கொள்ள இயலாமற்போயிருந்தது.
தன்னிடமிருந்த சாவியை எடுத்தாள்.அவள் உடல் ஏனோ நடுங்கியது. உள்ளம் படபடத்தது.நா உலர்ந்தது.எதையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் பேரில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.வரவேற்பறையில் ஒற்றையாள் மெத்தையில் இருவர் பின்னிப் பிணைந்திருந்த அருவருப்பான காட்சியைக் கண்ட மரியா கோபமும் வேதனையும் மேலிட அருகில் கிடந்த துடைப்பத்தை எடுத்தாள்; யாரை அடிக்கிறாள், எங்கே அடி விழுகிறது என்றெல்லாம் பாராமல் சரமாறிப் பொலிந்தாள்.பரிமளா துணிமணிகளைப் பொருக்கிக் கொண்டு அணிந்தும் அணியாமலும் காரில் ஏறிப் புறப்பட்டாள்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு சமயமறியாமல் தேவி அங்கு வந்தாள்.அவமானம் தாங்காத மரியா மூச்சு விட முடியாமல் திணறினாள்.மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் நடராஜன் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே போனவன் அன்று மாலை மரியாவின் இறப்புச் செய்தியைத் தேவியே தொலைபேசி வழியாகச் சொன்ன பின்னரே வீடு திரும்பினான் .கற்சிலை போல் கணவன் நின்று கொண்டிருக்க மரியாவின் உடன் பிறந்தவர்களே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று அடக்கம் செய்து முடித்தனர். அவனோடு பேசும் அளவிற்கு யாருக்கும் விருப்பமில்லை என்றாலும் உடன் பிறந்தவளின் காரியங்களை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக வேண்டா வெறுப்புடன் தன் தந்தையின் முன்னாள் சொத்தான அந்த வீட்டிலேயே அந்நியரைப் போல் தங்கினர்.மூன்றாம் நாள் நிகழ்வுக்கு ஆயத்தமாகும் நிலையில் காலையிலேயே எழும்பியவன் அவசரமாகப் புறப்பட்டு வெளியில் சென்றுவிட்டான். அனைத்தையும் அவளது அண்ணன்களும் தம்பிகளும் முன் நின்று செய்து முடித்தனர்.தன் கணவனோடு மாகோதா மெடிகல் சென்ற தேவி அங்கே நடராஜனையும் அவன் அணைப்பில் பரிமளாவும் மருத்துவரைக் காண காத்திருப்பதைக் கண்டு காரி உமிழ்ந்தவாறு கண்கள் குளமாக அவன் கண்களில் படாதபடி வெளியேறினாள்.
மரியாவின் பிரிவு அவனை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக ஈமச்சடங்கிற்காக வந்த பணம் , காப்புறுதி , அவளது சேமிப்பு என எல்லாம் அவன் வசமானது. பத்திரங்களைத் தயார் செய்து சொக்சோவிடமிருந்து இழப்பீட்டுத் தொகையைப் பெறவும் வகை செய்தான். அரவிந்த் சொந்த மகனாக இருப்பின் அவனுக்காக சொக்சோவில் ஒரு தொகை கிடைக்கும் என்பதால் மரியா இருக்கும்போதே அவனைத் தத்தெடுத்துப் பத்திரங்களையெல்லாம் முறையாகப் பதிவு செய்திருந்தான்.
அரவிந்த் வளர்ந்தான். பெண்கள் பால் நடராஜன் கொண்ட ஈடுபாடும் வளர்ந்து கொண்டே போனது. எத்தகைய பெண்களையும் வளைத்துவிடும் அவனது அந்தச் செயலை மட்டுமே அரவிந்தனால் கட்டுப்படுத்த முடியாத செயலாக இருந்தது. தினசரி ஆர்வத்துடன் பத்திரிக்கைகளை வாங்கிடுவான் நடராஜன்..முதல் வேலையாக அதில் காணப்படும் பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய முகவரிகளையும் தொடர்பு எண்களையும் தேடிப்பிடிப்பான். சமூகச் சேவையில் ஈடுபடும் பெண்களில் பலர் இவனது நட்புக்குரியவர்கள் ஆகியிருந்தனர்.
வயது நாற்பதைக் கடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவன் குரலில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருக்கவே செய்தது. குரலை நேரத்திற்கு ஏற்றவாறு மாற்றிப் இளமைத் துள்ளலோடு பேசும் தன்மையும் இவனுக்குண்டு. பல பெண்களை ஏமாற்ற அவனது குரல் துணையாக அமைந்தது. அந்த நிறுவத்தின் மேனேஜர் என்று தன் நட்பு குலாமை நம்பவைத்தான்.அக்கரையோடும் அன்போடும் பேசி வசியப்படுத்திக் கொள்வான். கவர்ச்சிகரமான துணிமணிகளை வாங்கி அனுப்பி வைப்பான்; கல்லும் கரையும் வகையில் வசனங்களையும் கவிதை வரிகளையும் பக்கம் பக்கமாக எழுதி அனுப்புவான்.
சலிக்காமல் நிமிடத்திற்கு நிமிடம் அழைத்து நலம் விசாரிப்பதோடு கரிசனத்தோடு “உணவருந்தி உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் ,” என்று கொஞ்சமும் சந்தேகம் ஏற்படா வண்ணம் நாடகமாடுவான்.கரைப்பார் கரைத்தால் கல்லும் உருகமென உருகியவள் தான் கார்த்திகா. சமூக சேவகியான கார்த்திகாவின் பத்திரிக்கை அறிக்கையொன்றில் வெளியான அவளது தொடர்பு எண்ணைக் கண்டது முதல் தேனைப்போல் பிசுபிசுவென அவளைத் தொடரலானான். சில மாதங்களில் அவளை நேரில் சந்திக்க சிரம்பானுக்கு விரைந்தான்.அவன் அவளுக்கான வாங்கி வந்த சுவைபானத்தை அருந்துமாறு வற்புறுத்தினான். அன்புத் தொல்லை தாளாது கார்த்திகா அதனைச் சுவைத்த பின் விடைபெற்று பிரிந்தனர்.
அன்று இரவு முதல் அவனது நினவு அவளை வாட்டியது.அவனோடு சேர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.அவள் தன் சிந்தனையைத் திசை மாற்றம் செய்வதற்கு எவ்வளவு முயன்றும் முடியாது தோற்றுப் போனாள்.வெளியில் சொல்லவும் முடியாமல் தன் உணர்வுகளை மறைக்கவும் முடியாமல் தடுமாறினாள்.கணவனை விபத்தொன்றில் பறிகொடுத்துப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் தனித்து தன் இரண்டு பிள்ளைகளோடு கௌரவமாக வாழ்ந்து வரும் நிலையில் இப்படி ஒரு தடுமாற்றமா? இளமை விடைபெற்று விட்ட நேரத்தில் . . . . ..அரசாங்க உயர் தரச் சேவையில் பணியாற்றும் தன்னைப் பற்றி சகாக்கள் தரக்குறைவாகப் பேசிவிடுவார்களே என்றும் சமுதாயத்திற்குச் சேவையாற்றுவதால் நாடறிந்த தன்னை இந்த சமுதாயம் தரன் தாழ்த்திப் பேசிவிடுமே என்றெல்லாம் கார்த்திகா அஞ்சினாள்.
செய்தி புகையென வெளிப்பட்டது. அவளது நட்பு வட்டத்தைச் சேர்ந்த பலரும் அவளை ஆதரித்தே பேசினர்.கோயிலில் அர்ச்சனைத் திருமணம் ஏற்பாடாயிற்று. அவளது காரைச் செலுத்தியவாறு கோயிலை அடைந்தான்.கோயில் பூட்டிக் கிடந்தது.அங்கு ஆள் நடமாட்டமே இல்லை. “கோயில் பூட்டியிருந்தால் என்ன? நீங்களே என் தெய்வம்.உங்களையே சாட்சியா வெச்சி இந்த தாலிய நான் கட்டறேன் ” என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டில் இருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிமுடித்தான். கார்த்திகா அதிர்ச்சியில் உரைந்து போனாள்.
தினசரி நடராஜன் வேலைகலை முடித்துவிட்டு சிரம்பானுக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டான்.அரவிந்த்தின் கல்வியிலும் நடத்தையிலும் கார்த்திகாவுக்குத் திருப்தி இல்லை.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைவதேது ? கார்த்திகாவின் தயவால் பழைய வண்டி புதிய வியோஸாக மாறியது. அவளது சொத்து தொடர்பான காரியங்களில் அதிக முனைப்புக் காட்டினான். கார்த்திகா விழிக்கத் தொடங்கினாள்.திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளத் துடித்தான்.கார்த்திகா ஒப்புக் கொள்ளவில்லை.தனக்குப் பிறகு தன் இரு பிள்ளைகளின் நிலை குறித்து மிகுந்த கவனத்துடன் நடந்து கொண்டாள்.பூனைக்கு உறவு ; பாலுக்குக் காவல் என்றானது அவள் நிலை.
அன்று மலாக்காவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கார்த்திகா செல்ல நேரிட்டது.நடராஜனுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அவள் அதனை அவனிடம் தெரிவிக்கவில்லை.நிகழ்ச்சி முடிந்ததும் அவனது வீட்டிற்குச் சென்றாள்.கதவு தாளிடப்படவில்லை.கழிப்பறையில் இருக்கிறான் என்பதை அறிந்தவள் வரவேற்பறையில் காத்திருந்தாள்.வழக்கத்திற்கு மாறான ஓசையுடன் தொலைபேசி அலறக் கேட்டாள்.அவனது சட்டைப் பையில் இருந்து வந்ததை அறிந்து அதனைக் கையில் எடுத்தாள். இரண்டு கைப்பேசிகள் இருக்கக் கண்டாள்.
விசையை அழுத்தினாள்.ஒரு பொண்ணில் குரல் “டாலிங் எத்தனை மணிக்கு வர்றீங்க்? இன்னிக்கு உங்க தேர்ன் !” என்ரொலித்தது. “அப்படியா ? நல்லது. நான் அவரோட மனைவிதான். அவர்கிட்ட சொல்லிடறேன், கவலைப்படாதீங்க!” என்று தொடர்பைத் துண்டித்தாள்.அவசரமாக அந்தக் கைப்பேசியில் இருந்த சில எண்களைக் குறித்துக் கொண்டாள்.குறுஞ்செய்திப் பெட்டகத்தில் பதிவாகியிருந்த அவன் அனுப்பிய ,அவனுக்கு அனுப்பப்பட்ட சில செய்திகளைப் படித்தாள். அவளுக்குத் தலை சுற்றியது. தரையில் கிடந்த ஒரு சீட்டு அவள் கண்ணில் பட்டது.காஜாங் சொகுசு விடுதியில் தங்கியதற்கான அவன் பெயரிலான பற்றுச் சீட்டு அது.
கழிப்பறையிலிருந்து வந்தவன் கார்த்திகாவின் கையிலிருந்தவற்றையும் கண்ணில் பொங்கி நின்ற கோபத்தையும் கண்டான்.ஒன்றும் நடவாதது போல் யதார்த நிலையில் தன்னை உட்படுத்திக் கொண்டவனாய் “வாங்க ! எங்க இவ்வளவு துரரம் ? வர்றதா சொல்லவே இல்லை! ” என்றவாறு இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்தான்.கார்த்திகா தன் கையில் இருந்தவற்றை சுவற்றில் விட்டெறிந்தாள்.துண்டைக் கையில் பிடித்தவாறு சிதறிய கைப்பேசியைப் பொறுக்கி எடுத்தான். “இதெல்லாம் நம்மலோட இல்ல. நேப்பால்காரனோட! ” இலாவகமாகப் பொய்யுரைத்தான். “ஆமாம் !நோப்பால்காரன் தான் செந்தமிழ்ல காதல் வசனம் அனுப்பறான்! அவன் தான் ஓட்டல்ல ரூம் போட்டுத் தங்கறான்! ஏற்கனவே உங்களப் பத்தி நெறைய கேள்விப்பட்டிருக்கேன். உங்க மகனே ஒரு வீடியோ பதிவையும் காட்டியிருக்கான்.ஆனா . . . நீங்க திருந்திட்டீங்கனு நெனச்சி ஏமாந்துட்டேன்.நம்மலப் பிரிக்கறதுக்கு அவனும் எவ்வளவோ தொல்லை குடுத்தான்.நானும் பொறுத்துக்கிட்டேன்.இப்படி உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நாங்க கஸ்டப்பட விரும்பல.கெட் லோஸ்ட் விட் யுவர் சன்! ” காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விட்டதே என்ற திருப்தியோடு அந்த இடைக்கால உறவைத் தலை முழுகிவிட்டு வீடு திரும்பினாள்.
அதன் பின்னர் தனக்கும் தன் வளர்ப்புத் தந்தக்கும் நடுவில் யாரும் நிரந்தரமாக வந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருந்தான்.தினசரி நடராஜன் அருந்தும் குளிர் நீரில் போதைப் பொடியைச் சேர்க்கலானான். இரவில் வீடு திரும்பியதும் குளிர் பெட்டியைத் திறந்து கடகட வென ‘அந்த’ நீரை எடுத்துக் குடித்துவிட்டுப் பித்து பிடித்தவனாய் சிலையாகி பின் பிணம் போல் சாய்ந்து காலை வரை மயக்கத்திலேயே இருந்திடுவான்.
அரவிந்த் அவனது பெற்றோரின் வழிகாட்டலுடன் நடராஜனின் வீடு , சேமநிதி , காப்புறுதி என்று எல்லாவற்றையும் தன்னை வாரிசாக எழுதி வைக்கச் செய்தான்.தினசரி இரு வேளை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நடராஜனின் உடலில் போதைப் பொருளும் தினசரி தன் பங்கை ஆற்றியது. அதன் விளைவே இன்று சவக்கிடங்கில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளான்.
பொழுது விடிந்தது.சவக்கிடங்கிலிருந்து நடராஜனின் ஊர்வலம் அமைதியாக ஒரு துளி கண்ணீருக்கும் கதியற்றவனாக அநாதைப் பிணமாக சுடலையை நோக்கி ஒவ்வொரு முச்சந்தியிலும் பட்டாசு வெடி தீபாவளி வெடியோடு வெடித்த வண்ணம் பயணிக்கிறது. அரவிந்தனோ நடராஜன் விட்டுச் சென்றிருக்கும் தனக்கு மட்டுமே சேரக்கூடிய சொத்து பத்துகளைக் கணக்கிட்டவாறு இறுதி ஊர்வல வண்டியில் கொல்லிச்சட்டியை ஏந்தியவாறு அமர்ந்திருந்தான். தன் மகன் சொத்துகளோடு திரும்பும் ஆர்வத்தில் ராசப்பன் தீபாவளி ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறான்.குடும்பத்தோடு நடராஜனின் சொத்தோடு இவ்வாண்டு அரவிந்தனுக்குத் தடபுடனான தீபாவளிதான்!!!!!

எழுதியவர் : தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ (2-Nov-16, 8:12 am)
Tanglish : meendum oru vatham
பார்வை : 298

மேலே