தமிழ்மகள்
சொல்விளையும் பொருளழகு சிந்தனையில் தனியழகு
வில்வளையும் போர்க்களத்தில் என்னவர்க்கு சாவழகு
கல்வளைந்து கருத்தோடும் களத்திலோர் கலையழகு
நல்லார்க்கு நலம்தந்து நலிந்தோர்க்கு வளம்தந்து
எல்லார்க்கும் அருள்சேர்க்கும் தமிழன்றோ பேரழகு!!
சொல்லெடுத்து பாடுகிறேன் என்குலத்து பெண்ணழகை
எல்லோரும் கேளீரோ பண்பட்ட பண்ணழகை!!
தெள்ளிய மொழியழகு தேடிவரும் பாவலர்க்கு
அள்ளித்தரும் கையழகு சிற்றிடை யசைந்துவிழும்
மெல்லவரும் நடையழகில் சிலிர்ப்பூட்டும் மெய்யழகு
கள்ளிருக்கும் பூவழகு பூவினுக்கு நேரழகு
பனிமலர் பலவினுள் படர்ந்துவரும் மெய்வாசத்
தனிமலர் தன்னழகே நான்கண்ட பெண்ணழகு!!
மயக்கவரும் மோகத்தில் மைபடர்ந்த விழியழகு
மொய்க்கவரும் வண்டினங்கள் பொய்க்கவிழும் குழலழகு
மெய்கண்ட சாத்திரங்கள் மெய்யென்று சொன்னதெலாம்
பொய்யென்று சொல்லவோர் சான்றுதரும் சிலையழகு!!
கண்ணாலே கத்தரித்த பாழுமனச் சிதறல்கள்
உன்னாலே கருத்தரித்து மீண்டெழுந்து வந்ததடி
மாங்கனி உச்சியிலே மணம்வீசி காத்திருக்க
ஏங்குகிறேன் நித்தமும் என்னிருக்கை வாராயோ!!
நாணத்து உடையவிழ்த்து நீயென்னை நெருங்கிவர
நானெழுந்து பார்க்கிறேன் யாவுமே கனவாக!!