மழலைத் தொழிலாளர்

வறுமை விலங்குகள்
பூட்டப்பட்ட மொட்டுக்களின்
மெல்லிய கரங்களில்
முற்கம்பிகள் பின்னுதற்கான
மோகம் திணிக்கப்படுகின்றது.

ஒருவேளை
வயிற்றுப் பசிபோக்க வாடும்
பிஞ்சுகள் மூலம்
ஒருசிலர் வருமானப்
பசிக்கான இரை தேடப்படுகின்றது.

இயலாமைகளை
விலைகொடுத்து வாங்குகின்ற
மேல் வர்க்கங்களின்
பாதணிகளுக்குத் தோலாகி அவர்கள்
மிதிகையிலும் அழுவதில்லை
இந்த சமூகம்.
சிறார்களை வேலைக்கு அமர்த்தல்
தடை என்னும் சட்டத்தை
உறங்கவைத்துத் தாலாட்டும்
தேசத்தில் தொலைந்து விட்டது
சிறார்கள் தம் எதிர்காலம்
கொண்ட கனவு.

வறுமையை படிக்கக்
கற்றுக்கொண்ட சிறு பிராயத்திலே
வாழ்க்கையையும் கற்றுக் கொள்ளும்
வரலாற்று சோகங்களின்
கண்ணீர்த் துடைக்கும் கரங்களில்
இன்னுமா அகற்றப்படவில்லை
ஏற்றத்தாழ்வெனும் மோதிரம்.

ஏழ்மையின் கற்களால்
எழுப்பப்பட்ட இந்த
ஓட்டைக் குடிசைகளை மாற்றி
ஒரு மாளிகை கொடுக்க வேண்டாம்
மழையில் நனையாமல் இருக்க
ஒரு மனிதாபிமான குடிசை
கொடுத்தால் போதும் ..
இந்தப் பிஞ்சுக்கரங்கள் நாளைய
உலகத்தையே கட்டி எழுப்பும்!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Nov-16, 7:53 pm)
பார்வை : 64

மேலே