மதுவால் மாண்பு இழந்து மறைந்த குடி மகனே

மதுவால் மாண்பு இழந்து
மறைந்த " குடி" மகனே
பாவி என்றும்
பதர் என்றும்
பாரினில் உள்ளோர்
பட்டம் சூட்டினார் - ஆயினும்
கவலை அற்று நீயும்
தினம் தினம் அனுதினம்
அரசு கல்லா பெட்டி
நிறைவு செய்த களிப்பில்
நித்திரையில் கல்லறை காப்பில் !
கண்ணீர் வற்றி காய்ந்து போய்
உண்ணீர் மறந்து செந்நீர் வடிக்கும்
கடைகுட்டி முதல் கட்டியவள் வரை
உன் கல்லறை காவலாய்
சூழ்ந்து நிற்கும் உறவுகளை
கண்திறந்து பார் அய்யா!
பாலின்றி குழந்தை அழும்
பட்டினியால் தாய் அழுவாள்
சோறின்றி பிள்ளை அழும்
சுகமின்றி மனைவி அழுவாள்
சான்றாண்மை வலியத் தொலைத்து
சகதியில் வீழ்ந்து சர்வமும் இழந்து
சவமாய் போன உன்னைக் கண்டு
சமைந்து போன தந்தை அழுவான்
விரும்பியே கற்பித்த கல்வி
விழலுக்கு இறைத்த நீர் என
குரு அழுவார்
பழுதற்று படைத்த உயிரும்
பயனற்று போனதென
பரமன் அழுவான்.
பாரினில் உன் மறைவுக்கு
பாடி அழுவார் யாருமில்லை.
பரமனும் பணிந்து வணங்கும்
பார் போற்றும் தாய் உன்னை
பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்தாள். பாந்தமாய் ஊட்டி வளர்த்து எடுத்தாள்
பத்து வயதில் நீ பள்ளி செல்லும்
அழகு பார்த்து பூரித்தாள்
பார் புகழ உயர்வாய் என
பகல் கனவு கண்டாள்
இருபது வயதில் வசந்தம்
வீசும் வாலிபம் கண்டாய்
இணையுடன் பிணைந்து நீ
மகிழ்வுறும் இல்லற மேன்மை
கண்டு மகிழ்வு எய்தினாள்
வெள்ளி விழா நீ காண்கையிலே
பள்ளி செல்லும் பேர பிள்ளைகள்
பசுமை பூண் மழலைப் பேச்சும்
பளிங்கு சிலை பேரழகும்
பார்த்து வியந்து மகிழ்வுற்றாள்
முந்துறும் முப்பது வயதில்
உன் முகம் திருந்தி
கண் மலர்ந்து அவள்
முழுமையாய் பார்ப்பதற்குள்
முகம் மறைத்து கல்லறை
முகவரியில் முடிந்து போனாய்
ஈன்ற பொழுதின் பெரு வலியால்
இன்று அவள் துடிக்கின்றாள்
ஈனனே உன் பிறப்பால்
இழந்தாள் அவள் நற்புகழை!
நண்பகலை வீதியிலே கழித்தாய்
நள்ளிரவை வீட்டில் கழித்தாய்
ஒரு நாளும் உன் வீட்டில்
உண்மை அகம் உடையானாய்
உற்றவள் மகிழ நீ வாழ்ந்ததில்லை.
மது கூட்டி வைத்த நட்பு
மதி இழந்து போனதே
நடு வீதியிலே நீ
உடுக்கை இழந்து நிற்கையிலே
நண்பனும் உடுக்கை இழந்து
நீதி மறந்து நின்றானே
நல்வழியில் உணை நடத்த
நன் முயற்சி கொள்ளா நண்பன்
முற்றும் குலைந்த உன்னைக் காண
முன்னமே முயன்று வந்து
பக்கத்து கல்லறையில்
பாவி அவன் படுத்து உள்ளானே
வைரமுத்துவாய் உலகில்
நீ வாழ மறந்தாலும்
உன் சத்து உயிர் முத்து உடல்
வைரம் இழந்து மரணம் தழுவ
விரைந்து ஏன் துடித்தாய்!
சூது இச்சை கொண்டான் தருமன்
அஞ்சான வாசம் ஒரு வருடம்
மது இச்சை கொண்ட உனக்கோ
அஞ்சான வாசம் மீளா கல்லறையில்
மது சூதை விடக் கடும் குற்றம்
என்பதாலோ ?
வாழ்வில் உன் கடைசி நாள்
வீதியிலே நீ வீழ்ந்து கிடக்கையிலே
வாரி உன்னை எடுத்து வந்து
வாசலிலே வைத்த போது உன்
வளமை குடும்ப நிலைமை
என்ன என்று உனக்கு தெரியுமா?
காலுக்கு செருப்பு இல்லை
கால் வயிற்று கூழுமில்லை
கட்ட துணியும் இல்லை
கண் அயர குடிசை இல்லை.
வாழ்க உன் வாழ்க்கை சரிதம்
வாழ்வோருக்கு நல்லதோர் பாடமாக
வாழ்வியல் அறியாது வாழும்
மாந்தர் தாம் மடமை நீங்க!