குட்டி தேவதை

உருவில் பெருத்தேன்
இருப்பிடம் சிறுத்தது...
காலால் உதைத்துப் பார்த்தேன்
கதவுகள் மெல்லத் திறந்தது...
அழுத்தம் தந்தேன்
"அம்மா" எனும் தமிழ் வார்த்தை
அலறலாக ஒலித்தது...
சிரத்தால் கதவுகள் முட்டினேன்
புறந்தள்ளியது என் தாய்வீடு..
வெள்ளை நிறத் தேவதைகள்
வெளிச்சத்தில் எனைத் தூக்க
விழி சொக்கும் நிலையிலும்
விடாமல் எனைப்பார்த்தது
இரு கண்கள்...!
வியர்வைத் துளிகள்
அவள் அங்கமெங்கும்..
கண்ணீர்த் துளிகள்
அவள் விழிகளெங்கும்...
கடவுளாலும் முடியாத
சாதனைதான்...
பரிசாக கிடைத்த
"குட்டி தேவதை" நான்..!