புதியதோர் மழைக்காலம்
![](https://eluthu.com/images/loading.gif)
இருளும்
ஒளியுமாய்
கசியும் காதலில்
ஆதியகால
அடர் இருளாய்
நானும்
பெருந்தீயென
நீயும்
பிரசவித்திருந்தோம்
நிறங்கள் மரித்த
மழையொன்றில்
காமம்
புதுவண்ணமாய்
பொழிய
மொழிகளேதுமற்று
நீயும்
நானும் ஆடையின்றி
அலைந்திருந்தோம்
வெட்கம்
உனக்கும்
எனக்குமிடையில்
இலைகளால்
ஆடையிட்டபோதும்
காமம் பற்றிய
புரிதலை
குழந்தைகளாகவே
கடந்தோம்!!
கற்பழிப்புக்கள் அன்றில்லை...
இயற்கையின்
இருப்பிடத்தை
இறகுகளின்றி
கால்களால்
கடந்துகொண்டேயிருந்தோம்
உன் குரல்வளையில்
மொழி குயிலாகவும்
என் அடிவயிற்றில்
மொழி கெஞ்சலாகவும்
பரிணாமம் கண்டது
மெளனம் என்றொரு
பாஷைக்கு நீயே
ராணியானாய்!!
தற்கொலை பிறந்தது....
ஒரு குடிசையமைக்க
மூளை முன்னேறியதும்
உன் கால்களுக்கு
கடிவாளம் வந்தது
ஆண்மையின்
அடக்குமுறையென
நீயும்
பெண்மையின்
திமிரென நானும்
உச்ச குரலில்
போராடுகிறோம் இன்னும்
மீதமாய்
காதல்
யாருமற்றபோதும்
இருளும்
ஒளியுமாய்
கசிகிறது
மீளவும்
அடர் இருளென
நானும்!
பெருந்தீயென
நீயும்!
புதுவண்ண மழையாய்
காமமும்!
புதிதாய்
ஓர் ஒப்பந்தம்
செய்துகொண்டோம்
மழையில் நனைவதில்லையென...
இருந்தும்
அறிக்கையொன்றில்
உலகசனத்தொகை
கூடுகிறதாம்
மானிடம்
போற்றலுக்குரிய
துயரம்